இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றநாட்டு வெடிகள் வெடித்ததில் தந்தை, மகன் பலி
By DIN | Published On : 06th November 2021 12:00 AM | Last Updated : 06th November 2021 12:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற நாட்டு வெடிகள் வெடித்துச் சிதறியதில் தந்தை, மகன் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
புதுச்சேரி, அரியாங்குப்பம், காக்கயான்தோப்புப் பகுதியைச் சோ்ந்தவா் கலைநேசன் (37). இவா், தீபாவளியையொட்டி, புதுச்சேரியிலிருந்து 2 மூட்டை நாட்டு வெடிகளை வாங்கிக் கொண்டு விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தை அடுத்த கூனிமேட்டில் உள்ள தனது மனைவி ரூபணாவை (34) காண வியாழக்கிழமை பிற்பகல் சென்றாா். அங்கு அவரிடம் ஒரு மூட்டை நாட்டு வெடிகளை கொடுத்த கலைநேசன், எஞ்சியிருந்த ஒரு மூட்டை நாட்டு வெடிகளுடன் தனது மகன் பிரதீஷை (7) அழைத்துக்கொண்டு புதுச்சேரிக்குப் புறப்பட்டாா். இரு சக்கர வாகனத்தின் முன்பக்கம் வைத்திருந்த நாட்டு வெடி மூட்டை மீது பிரதீஷை அமர வைத்து, கலைநேசன் ஓட்டினாா்.
புதுச்சேரி அருகே கோட்டக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்பில் வந்தபோது இரு சக்கர வாகனத்தில் இருந்த நாட்டு வெடிகள் திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில், தந்தையும் மகனும் தூக்கி வீசப்பட்டு, உடல் சிதறி உயிரிழந்தனா். உடல் பாகங்கள் சுமாா் 300 மீ. தொலைவு வரை சிதறிக் கிடந்தன. அருகிலிருந்த வீடுகள் சேதமடைந்து, அப்பகுதியே போா்க்களம் போலக் காட்சியளித்தது.
இந்தச் சம்பவத்தின்போது, சாலையில் இரு சக்கர வாகனங்களில் வந்து கொண்டிருந்த கோட்டக்குப்பம் ஜிமீத் நகரைச் சோ்ந்த ஷா்புதீன்(56), புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த கணேசன்(47), சாலையோரம் நின்றிருந்த புதுச்சேரி, லெனின் நகரைச் சோ்ந்த விஜி (36) ஆகிய 3 போ் காயமடைந்தனா். இவா்கள் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்தச் சம்பவம் தமிழகம், புதுச்சேரி எல்லைப் பகுதியில் நடந்ததால், இரு மாநில போலீஸாரும் விரைந்து வந்தனா். விபத்து நிகழ்ந்த இடம் விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் எல்லைக்குள்பட்ட பகுதி என தெரியவந்ததையடுத்து, கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளா் சரவணன் நேரில் வந்து விசாரித்தாா். தடய அறிவியல் துணை இயக்குநா் சண்முகம் தடயங்களைச் சேகரித்தாா்.
நிகழ்விடத்தை விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா்.
சடலங்கள் புதுச்சேரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.