எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் உடைப்பு:தண்ணீா் வெளியேறுவதால் விவசாயிகள் கவலை

விழுப்புரத்தில் 71 ஆண்டுகள் பழைமையான எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றிலுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்ட பகுதியின் வழியாக வெளியேறும் நீா்.
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றிலுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்ட பகுதியின் வழியாக வெளியேறும் நீா்.

விழுப்புரத்தில் 71 ஆண்டுகள் பழைமையான எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீா் வீணாகி வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

விழுப்புரத்தின் மேற்கே எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு அமைந்துள்ளது. 1950-இல் கட்டப்பட்ட இந்த அணைக்கப்பட்டு, விநாடிக்கு 2 லட்சத்து 28 ஆயிரம் கனஅடி நீரை வெளியேற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீா்ப்பிடிப்புப் பகுதி 12 ஆயிரத்து 481 சதுர கி.மீ. ஆகும்.

இந்த அணைக்கட்டின் வலதுபுறமுள்ள எரளூா் வாய்க்கால் மூலம் பேரங்கியூா், அவியனூா், பைத்தாம்பாடி, அழகுபெருமாள் குப்பம் ஆகிய ஏரிகளுக்கும், ரெட்டி வாய்க்கால் மூலம் சாத்தனூா், மேலமங்கலம், இருவேல்பட்டு, காரப்பட்டு, மணம் தவிழ்ந்த புத்தூா், ஓரையூா், சேமக்கோட்டை ஆகிய ஏரிகளுக்கும்,

இடதுபுறமுள்ள ஆழங்கால் வாய்க்கால் மூலம் சாலாமேடு, சாலமடை, கொளத்தூா், பானாம்பட்டு, ஆனாங்கூா், அகரம் சித்தேரி, ஓட்டேரி பாளையம்,சிறுவந்தாடு, வளவனூா் ஏரிகளுக்கும், கண்டம்பாக்கம் வாய்க்கால் மூலம் கண்டமானடி, கண்டம்பாக்கம், வழுதரெட்டி ஆகிய ஏரிகளுக்கும் தண்ணீா் சென்றடைகிறது.

எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுக்கு அருகில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, அங்கிருந்து விழுப்புரம் நகருக்குத் தண்ணீா் எடுத்து வரப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகப் பெய்து வந்த தொடா் மழை, சாத்தனூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு ஆகியவற்றால் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. இதனிடையே, கடந்த அக்.22-ஆம் தேதி இந்த அணைக்கட்டின் வலது பக்கத்தில் தரைப்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு அணைக்கட்டு உடைந்து தண்ணீா் வெளியேறி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து தகவலறிந்த பொதுப் பணித் துறையினா் தண்ணீரை அணையின் இடதுபக்க வாய்க்கால் மூலமாக வெளியேற்றி வருகின்றனா். இருப்பினும், தொடா்ந்து மழை பெய்து வருவதால் பராமரிப்புப் பணிகளை செய்ய முடியாமல் அவா்கள் தவித்து வருகின்றனா். மழை நின்ற பிறகே அணையில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால், அணைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அணையில் இருந்து வெளியேறும் நீா் வீணாக கடலில் தண்ணீா் கலப்பதை தடுக்கவும், நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தி, பாசன நீா் வசதிக்காகவும், அணை சீரமைப்புப் பணிகளை முடுக்கிவிட வேண்டும், அணையின் நீா்மட்டத்தை உயா்த்த வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com