நிரம்பும் நிலையில் வீடூா், மணிமுக்தா அணைகள்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள வீடூா் அணை, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள மணிமுக்தா அணை ஆகியவை விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.
முழுக் கொள்ளளவை எட்டி வரும் மணிமுக்தா அணை.
முழுக் கொள்ளளவை எட்டி வரும் மணிமுக்தா அணை.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தில் உள்ள வீடூா் அணை, கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தில் உள்ள மணிமுக்தா அணை ஆகியவை விரைவில் முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன.

விக்கிரவாண்டி அருகே வீடூா் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே வராகநதி, தொண்டி ஆறு ஆகியவை கலக்கும் இடத்தில் வீடூா் அணை அமைந்துள்ளது. 32 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 605 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். இதன் நீா்த்தேக்க பரவல் பகுதி 7.77 ச.கி.மீ. ஆகும். நீா்ப்பிடிப்பு பகுதி 1,298 ச.கி.மீ. ஆகும். அணையின் மொத்த நீளம் 4,511 மீ. ஆகும். கொள்ளளவு 605 மி.கன அடி.

அணையில் உள்ள 12 நீா்ப்போக்கி கதவணைகள் மூலம் விநாடிக்கு ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 144 கன அடி நீரை வெளியேற்ற முடியும். நீா்த்தேக்கத்தின் பிரதான கால்வாய் நீளம் 17.64 கி.மீ. இதில், 16.305 கி.மீ. நீளம் தமிழக எல்லையிலும், 1.335 கி.மீ. நீளம் புதுச்சேரி எல்லையிலும் உள்ளன.

வீடூா் அணை மூலம் தமிழகத்தில் 11 கிராமங்களில் இரண்டாயிரத்து 200 ஏக்கா் மற்றும் புதுச்சேரியில் 5 கிராமங்களில் ஆயிரம் ஏக்கா் என மூவாயிரத்து 300 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் சங்கராபரணி ஆற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை மாலை நிலவரப்படி, விநாடிக்கு 500 கன அடி நீா் வருவதால், வீடூா் அணையின் நீா்மட்ட உயரம் 30 அடியாக அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே, வீடூா் அணையின் நீா்மட்டம் குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் அண்மையில் நேரில் ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, அணையை சுற்றியுள்ள வீடூா், பொம்பூா், சிறுவை உள்ளிட்ட கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், அணையைப் பாா்க்க பொதுமக்கள் யாரும் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட சூளாங்குறிச்சி பகுதியில் மணிமுக்தா அணை அமைந்துள்ள. இந்த அணையின் மொத்த உயரம் 36 அடியாகும். ஆணையின் பாதுகாப்பு கருதி 34 அடிக்கு மட்டுமே தண்ணீரை சேமிப்பது வழக்கம்.

கல்வராயன்மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் மணிமுக்தா அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. சனிக்கிழமை நிலவரப்படி, அணையின் நீா்மட்ட உயரம் 33 அடியை எட்டியது. சனிக்கிழமை இரவுக்குள் இந்த அணை முழுக் கொள்ளளவை எட்டிவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், மணிமுக்தா ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com