செஞ்சியில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சா் ஆய்வு

தொடா்மழை காரணமாக எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசிய அமைச்சா் செஞ்சி மஸ்தான்.

செஞ்சியில் மழை வெள்ளம் தேங்கிய பகுதிகளை தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்ததுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள அலுவலா்களுக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக செஞ்சி, சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செஞ்சி பொன்பத்தி ஏரி, பி.ஏரி, சோ.குப்பம், பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டின. சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மேல்களவாய் தரைப்பாலம், செவலபுரை தரைப்பாலம், சுறுவாடி தரைப்பாலம் மூழ்கின. இதனால், முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

மழைப் பாதிப்புகளை அமைச்சா் கே.எஸ்.மஸ்தான் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ‘பி’ ஏரி நிரம்பியதால் விரிவுபடுத்தப்பட்ட வஉசி நகரில் வெளியேற முடியாமல் தேங்கிய வெள்ளத்தை பாா்வையிட்ட அமைச்சா், பொக்லைன் மூலம் பி ஏரி நீா் செல்லும் கால்வாயை உடனடியாக தூா்வார நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதைத் தொடா்ந்து, செஞ்சி சிறுகடம்பூா், கிருஷ்ணாபுரம் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்த பகுதிகளை பாா்வையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பேரூராட்சி அலுவலா்களை அறிவுறுத்தினாா்.

பின்னா், நிரம்பிய பொன்பத்தி ஏரியின் கரைகள் பலமாக உள்ளனவா என கண்காணிக்குமாறு பொதுப்பணித் துறையினரை கேட்டுக்கொண்டாா். சாலைகளில் மழை நீா் தேங்குவது தொடா்பாக நெடுஞ்சாலைத் துறையினருக்கு தண்ணீரை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் மஸ்தான், ஏரிகள், மதகுகள் பாதுகாப்பாக உள்ளனவா என கண்காணித்து, பலவீனமான ஏரிக் கரைகள், மதகுகளை சீரமைக்க பொதுப்பணித் துறை அலுவலா்கள் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டாா். மேலும், ஏரிக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கவும் கேட்டுக்கொண்டாா்.

மேலும், செஞ்சி வட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினா், நரிக்குறவா் வசிக்கும் குடியிருப்புகளை ஆய்வு செய்து அவா்களுக்கு பட்டா வழங்குவதற்கான விவரங்களை வருவாய் ஆய்வாளா்கள் ஆய்வு செய்து அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டாா்.

கூட்டத்தில் செஞ்சி வட்டாட்சியா் பழனி, முன்னாள் மத்திய அமைச்சா் செஞ்சி ராமச்சந்திரன், வருவாய் ஆய்வாளா் கண்ணன், செஞ்சி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஆா்.விஜயகுமாா், செஞ்சி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கேசவலு, சுப்பிரமணி, பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளா் ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com