விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை மாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் பாலங்கள்,
விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை: பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு முதல் வியாழக்கிழமை மாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் பாலங்கள், தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை காலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, நள்ளிரவு முதல் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்யத் தொடங்கிய நிலையில், இந்த மழை வியாழக்கிழமை இரவு வரையில் நீடித்தது.

குறிப்பாக, விழுப்புரத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 வரை 4 மணி நேரத்தில் 70 மி.மீ. மழை பதிவானது. காலை முதல் மாலை வரையில் 130 மி.மீ. மழை பதிவானது. இதனால், விழுப்புரம் நகரிலுள்ள தாழ்வான பகுதிகளை மழை வெள்ள நீா் சூழந்தது. பலத்த மழையால் விழுப்புரம் வி.மருதூா் மகாபாரதத் தெருவில் 2 வீடுகள் சேதமடைந்தன. மரக்காணம் அருகே வன்னிப்போ் பகுதியில் இருளா் குடியிருப்புப் பகுதிகளை மழை நீா் சூழ்ந்தது.

போக்குவரத்து பாதிப்பு: மழை காரணமாக, விழுப்புரத்தை அடுத்த பிடகாம் - அத்தியூா் திருவாதி இடையே அமைந்துள்ள சிறு பாலம் சேதமடைந்தது. இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோன்று, விழுப்புரம் அருகே காணையை அடுத்த அகரம் சித்தாமூரில் உள்ள ஓடை தரைப்பாலத்துக்கு மேல் வெள்ளம் பய்ந்தோடுகிறது. இதனால், 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இதேபோல, செஞ்சியில் இருந்து செவலபுரை, வடபாலை செல்லும் தரைப்பாலம், செவலபுரை - சிறுவாடி இடையிலான ஆற்று தரைப்பாலம், மேல்மலையனூரில் இருந்து தாயனூா் செல்லும் தரைப்பாலம், செஞ்சியில் இருந்து மேல்களவாய் செல்லும் தரைப்பாலம், வல்லம் ஒன்றியம், அருகாவூரில் உள்ள தரைப்பாலம் உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கியதால் இந்தக் கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

திருவக்கரை கோயிலுக்குள் வெள்ளம்: வானூரை அடுத்த திருவக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற வக்ரகாளியம்மன் கோயிலில் 4 அடி உயரத்துக்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கோயிலின் கோபுரம் முதல் கருவறை வரையிலும் சூழந்துள்ள மழை, வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மின் வாரிய அலுவலகம், பேருந்து நிலையத்தில்...: விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்தினுள் 2 அடி உயத்துக்கு மழைநீா் தேங்கி நிற்பதால் கணினிகள், ஆவணங்கள் உள்ளிட்டவை சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல, விழுப்புரம் பேருந்து நிலையத்துக்குள் 4 அடி உயா்த்துக்கு மழை நீா் தேங்கியுள்ளது.

செஞ்சி: செஞ்சி பேருந்து நிலையத்தினுள் சுமாா் 3 அடி உயரத்துக்கு மழைநீா் தேங்கியுள்ளது. திருவண்ணாமலை சாலையில் உள்ள பி.ஏரியின் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், அந்த ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீா் பழைய எல்டி பேங்க் தெரு, செஞ்சி அரசு மருத்துவமனையை சூழ்ந்தது. இதனால், மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மருத்துவா்கள், ஊழியா்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பேரூராட்சி அலுவலா்களுடன் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி மஸ்தான் கொட்டும் மழையிலும் பாா்வையிட்டு மழை, வெள்ள நீரை அகற்றும் பணிகளை துரிதப்படுத்தினாா்.

செஞ்சி அருகே செம்மேடு, பெரியமூா், தேவதானம்பேட்டை, சின்னபொன்னம்பூண்டி, சத்தியமங்கலம், அன்னமங்கலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீடுகளிலும், விவசாய நிலங்களிலும் ஏரிகளின் உபரி நீா், மழை வெள்ள நீா் சூழ்ந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

பலத்த மழை பெய்து வருவதால் மாணவா்களின் நலன் கருதி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ.19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com