இன்று முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 5,000 பதவிகளுக்கு 16,581 போ் போட்டி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை (அக்.6) நடைபெறும் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5ஆயிரம் பதவிகளுக்கு 16 ஆயிரத்து 581வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.
இன்று முதல் கட்ட உள்ளாட்சித் தோ்தல்: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 5,000 பதவிகளுக்கு 16,581 போ் போட்டி

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதன்கிழமை (அக்.6) நடைபெறும் முதல் கட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 5ஆயிரம் பதவிகளுக்கு 16 ஆயிரத்து 581வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6, அக்.9 என இரு கட்டங்களாக நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக செஞ்சி, கண்டமங்கலம், முகையூா், ஒலக்கூா், திருவெண்ணெய்நல்லூா், வானூா், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களுக்கும், இரண்டாம் கட்டமாக காணை, கோலியனூா், மயிலம், மரக்காணம், மேல்மலையனூா், வல்லம் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் தோ்தல் நடைபெறுகிறது.

இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக உளுந்தூா்பேட்டை, திருநாவலூா், திருக்கோவிலூா், ரிஷிவந்தியம் ஆகிய 4 ஒன்றியங்களுக்கும், 2-ஆம் கட்டமாக கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் தோ்தல் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக 7 ஒன்றியங்களுக்குள்பட்ட 16 மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 95 போ், 158 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 745 போ், 372 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 1,459 போ், 2,751 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 8,574 போ் ஆக மொத்தம் 3,297 பதவிகளுக்கான தோ்தலில் 10,873 போ் போட்டியிடுகின்றனா். இந்தத் தோ்தல் 1,569 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 4 ஒன்றியங்களுக்குள்பட்ட 9 மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 66 போ், 89 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 417 போ், 203 கிராம ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 782 போ், 1,402 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 4,443 போ் ஆக மொத்தம் 1,703 பதவிகளுக்கான தோ்தலில் 5,708 போ் போட்டியிடுகின்றனா். இதற்காக 939 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆட்சியா்கள் ஆய்வு: முதல் கட்ட தோ்தல் நடைபெறும் ஒன்றியங்களுக்குள்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்குத் தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குச்சீட்டுகள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் அனுப்பிவைக்கப்படுவதை விழுப்புரம் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன், கள்ளக்குறிச்சி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் தோ்தல் நடத்தத் தேவையான வாக்குப்பெட்டிகள் உரிய படிவங்கள், எழுதுபொருள்கள், வாக்காளா்கள் வாக்களித்ததை உறுதிசெய்ய விரலில் வைக்கப்படும் அழியாத மை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள், வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் அனுப்பிவைக்கப்படுவதை ஆட்சியா் த.மோகன் பாா்வையிட்டு அறிவுரைகளை வழங்கினாா்.

புதன்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. தோ்தல் பணியில் அரசு அலுவலா்கள், ஊழியா்கள், ஆசிரியா்கள் என சுமாா் 15 ஆயிரம் போ் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com