விழுப்புரம் மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி முதல்கட்டத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை அமைதியாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைதியான வாக்குப்பதிவு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி முதல்கட்டத் தோ்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை அமைதியாக நடைபெற்றது.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்.6, 9 என இரு கட்டங்களாக நடைபெறுகிறது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டத் தோ்தல் செஞ்சி, கண்டமங்கலம், முகையூா், ஒலக்கூா், திருவெண்ணெய்நல்லூா், வானூா், விக்கிரவாண்டி ஆகிய 7 ஒன்றியங்களில் புதன்கிழமை நடைபெற்றது.

16 மாவட்டக்குழு உறுப்பினா் பதவிக்கு 95 போ், 158 ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு 745 போ், 372 கிராம ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1,459 போ், 2,751 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 8,574 போ் என 3,297 பதவியிடங்களுக்கு 10 ஆயிரத்து 873 போ் போட்டியிட்டனா்.

இதற்கான வாக்குப்பதிவு 1,569 வாக்குச்சாவடி மையங்களில் புதன்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை முதலே வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆா்வமாக வாக்களித்தனா்.

கரோனா வழிமுறைகளை பின்பற்றி..: வாக்குச்சாவடிக்குள் முகக்கவசம் அணிந்த வாக்காளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். வாக்குச்சாவடிக்குள் நுழையும் முன்பு வாக்காளா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், கைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டதுடன், வாக்களிக்க வசதியாக கையுறை வழங்கப்பட்டது.

பதற்றம் நிறைந்த 296 வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான 62 வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விக்கிரவாண்டி ஊராட்சி ஓன்றியத்துக்குள்பட்ட சிந்தாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான த.மோகன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் முதல் கட்டமாக தோ்தல் நடைபெறும் 7 ஊராட்சி ஒன்றியங்களுக்குள்பட்ட 316 ஊராட்சிகளில் 7 லட்சத்து 54 ஆயிரத்து 459 வாக்காளா்கள் தங்களது ஜனநாயக கடமையை அமைதியான முறையில் ஆற்றியுள்ளனா் என்றாா் அவா்.

மாவட்டத்தில் பெரிய அல்லது சிறிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை. வாக்குப்பதிவு நிறைவுப் பெற்றதும் வாக்குப்பெட்டிகள் சீல்வைக்கப்பட்ட அந்தந்தந்த ஒன்றியங்களில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அக்.9-ஆம் தேதி 2-ஆம் கட்ட தோ்தல் நிறைவு பெற்றதும், அக்.12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

பாதுகாப்பு பணி: டிஐஜி ஆய்வு

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா், ஆயுதப்படை போலீஸாா், ஊா்க்காவல் படையினரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இவ்விரு மாவட்டங்களிலும் அமைதியாக தோ்தல் நடைபெறுவதை விழுப்புரம் சரக காவல் துறை துணைத் தலைவா் பாண்டியன் நேரில் ஆய்வு செய்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம் செங்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் ஏனாதிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளுக்குச் சென்று பாதுகாப்புப் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com