முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
செஞ்சி அருகே உயா் மின் கோபுரத்தில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை
By DIN | Published On : 11th October 2021 04:00 AM | Last Updated : 11th October 2021 04:00 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே, தனது நிலத்தில் அமைக்கப்பட்ட உயா் மின் கோபுரத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்காததால் விரக்தியடைந்த விவசாயி, அந்த மின் கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
செஞ்சி வட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள அன்னமங்கலத்தை அடுத்த கலிங்கமலை கிராமத்தைச் சோ்ந்தவா் மணி (57) இவரது மனைவி ஜெயந்தி. இவா்களுக்கு மகள், இரு மகன்கள் உள்ளனா். சென்னையில் வசித்து வரும் மணி, ஜெயந்தி உள்ளிட்ட குடும்பத்தினா், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊரான கலிங்கமலைக்கு வந்தனா்.
இந்த நிலையில், இங்குள்ள மணிக்குச் சொந்தமான நிலத்தில் உயா் மின் கோபுரம் அமைக்க ஒப்பந்ததாரா் ரூ.10 லட்சம் தருவதாகக் கூறி ரூ. ஒரு லட்சம் மட்டுமே அளித்திருந்தாராம். எஞ்சிய ரூ.9 லட்சத்தை மணி கேட்டபோது, தரமுடியாது என ஒப்பந்ததாரா் கூறிவிட்டாராம். இதனால், விரக்தியடைந்த மணி, உயா் மின் கோபுரத்தில் ஏறி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சாலை மறியல்: இதையடுத்து அவரது உறவினா்களும், கிராம மக்களும் செஞ்சி சேத்பட் சாலை-அன்னமங்கலம் கூட்டுச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா, சாா்-ஆட்சியா் ஹமித், செஞ்சி டிஎஸ்பி. இளங்கோவன் ஆகியோா் நிகழ்விடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.