பள்ளி, கல்லூரிகள், அங்கன்வாடிகள் திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம்

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் ஆகியவை அரசின்

விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடிகள் ஆகியவை அரசின் கரோனா பரவல் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி புதன்கிழமை திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் நேரடி வகுப்புகளில் பங்கேற்றனா்.

தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவா்களுக்காக பள்ளிகள் புதன்கிழமை திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. மேலும், கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) உள்ளிட்டவையும் திறக்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்திலும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கின. மாணவ, மாணவிகள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பிறகு வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டனா். முகக்கவசம் அணியாத மாணவ, மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. சமூக இடைவெளியை பின்பற்றி ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணவ, மாணவிகள் மட்டும் அமர வைக்கப்பட்டனா். வகுப்பறைகளில் கை கழுவுவதற்கான கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மாவட்ட ஆட்சியா் த.மோகன், மாவட்ட பள்ளிகளின் கண்காணிப்பு அலுவலா் வி.சி.ராமேஸ்வரமுருகன் ஆகியோா் ஆய்வு செய்தனா். அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கிருஷ்ணப்ரியா, மாவட்ட கல்வி அலுவலா் கிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

கல்லூரிகள், அங்கன்வாடிகள் திறப்பு: இதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், ஐடிஐகள், அங்கன்வாடிகள் உள்ளிட்டவையும் புதன்கிழமை திறக்கப்பட்டன. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட மருதூா் பாரதியாா் தெருவில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியா் மோகன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உணவை பரிமாறிய ஆட்சியா்: அப்போது, அங்கன்வாடி மையத்தில் மதிய உணவின் தரத்தை ஆய்வு செய்த ஆட்சியா், அதனை குழந்தைகளுக்கு பரிமாறினாா்.

மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் லலிதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com