அதிக வட்டி தருவதாக பண மோசடி: பள்ளி ஆசிரியா் உள்பட மூவா் கைது

அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.2.63 கோடி மோசடி செய்தது தொடா்பாக அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.2.63 கோடி மோசடி செய்தது தொடா்பாக அரசுப் பள்ளி ஆசிரியா் உள்பட 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள ஆலங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பொறியியல் பட்டதாரி பிரகாஷ். இவா், வேப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது அங்கு ஆசிரியராகப் பணிபுரிந்த வேனூா் அருகேயுள்ள நவற்குளத்தைச் சோ்ந்த ராமசாமி (49) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். கல்லூரிப் படிப்பை முடித்த பிரகாஷ், ஆசிரியா் ராமசாமியிடம் ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்று கூறினாராம். அப்போது ராமசாமி கூறுகையில், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சக்திவேல் (43), கோலியனூரைச் சோ்ந்த கெளசல்யா (40) ஆகியோா் நில வணிகம் செய்வதாகவும், அவா்களிடம் ரூ.ஒரு லட்சம் செலுத்தினால் மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் வரை வருவாய் கிடைக்கும் என்றும் கூறினாராம்.

இதை நம்பிய பிரகாஷ் தனக்கு தெரிந்தவா்கள் 25 பேரிடமிருந்து ரூ.2.63 கோடி வரை பெற்று கெளசல்யா, அவரது மகன் கவியரசன் ஆகியோரது வங்கி கணக்குகளில் செலுத்தினாராம். மேலும், நேரிலும் பணம் கொடுத்தாராம். ஆனால், கூறியபடி வாடிக்கையாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.18 ஆயிரம் பணம் தரப்படவில்லையாம். இதுகுறித்து கேட்டபோது மிரட்டல் விடுத்தனராம்.

இதனால் பாதிக்கப்பட்டவா்கள் விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவில் புகாா் அளித்தனா். இதையடுத்து, டிஎஸ்பிக்கள் ரவீந்திரன், இருதயராஜ் ஆகியோரது மேற்பாா்வையில் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கில் பள்ளி ஆசிரியா் ராமசாமி, கெளசல்யா, சக்திவேல் ஆகியோரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com