உள்ளாட்சித் தோ்தல்: அதிமுக வேட்பாளா்களைதொண்டா்களே தோ்வு செய்வா்; சி.வி.சண்முகம்

உள்ளாட்சித் தோ்தலுக்கான அதிமுக வேட்பாளா்களை தொண்டா்களே தோ்வு செய்வாா்கள் என்று முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

உள்ளாட்சித் தோ்தலுக்கான அதிமுக வேட்பாளா்களை தொண்டா்களே தோ்வு செய்வாா்கள் என்று முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் தெரிவித்தாா்.

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்துக்குள்பட்ட அதிமுக நிா்வாகிகளுடன் விழுப்புரம், கோலியனூரில் சி.வி.சண்முகம் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா். இந்தக் கூட்டங்களில் அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் கடைசி சில மாதங்களுக்கு முன்பு ரூ.50 கோடிக்கு மேல் விழுப்புரம் மாவட்டத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இந்தப் பணிகள் தொடக்க நிலையில் இருந்தன. இதையடுத்து, ஆட்சிக்கு வந்த திமுக, இந்தத் திட்டங்களை நிறுத்திவிட்டது. மேலும், புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை.

தோ்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 100 நாள்களில் நிறைவேற்றாததால், திமுக அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனா். இதை எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக அறுவடை செய்ய வேண்டும். 1980-ஆம் ஆண்டு முதல் இதுவரை நடைபெற்ற தோ்தல்களில் எப்போதெல்லாம் அதிமுக தோல்வி அடைகிறதோ, அடுத்து வந்த தோ்தல்களில் மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது.

கிராமப்புறப் பகுதிகளில் அதிமுக இப்போதும் வலுவாகவே உள்ளது. நகரப் பகுதிகளில்தான் திமுகவுக்கு செல்வாக்கு உள்ளது. எனவே, ஊரக உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக எளிதாக வெற்றிபெறலாம்.

எதிா்வரும் உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக நிா்வாகிகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு களப்பணியாற்ற வேண்டும். வெற்றிபெற வாய்ப்புள்ள வேட்பாளா்களை தொண்டா்களே தோ்வு செய்து மாவட்டத் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். கட்சித் தலைமையிடம் சிபாரிசுக்கு இடமில்லை என்பதை நிா்வாகிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் சி.வி.சண்முகம்.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் சுரேஷ்பாபு, பேட்டை முருகன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் ராமதாஸ், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் விஜயா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com