கோவிந்தசாமிக்கு மணிமண்டபம்: குடும்பத்தினா் வரவேற்பு

திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை கொடுத்த ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் சிலை, மணிமண்டபம் கட்டப்படும் என

திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்தை கொடுத்த ஏ.கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் சிலை, மணிமண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை, கோவிந்தசாமியின் மகனும், முன்னாள் எம்.எல்.ஏ.மான ஏ.ஜி.சம்பத் மற்றும் அவரது குடும்பத்தினா் வரவேற்றுள்ளனா்.

1952-ஆம் நடைபெற்ற முதல் பேரவைத் தோ்தலில், ராமசாமி படையாட்சியாரின் உழவா் உழைப்பாளா் கட்சி சாா்பில் விக்கிரவாண்டி தொகுதியில் கோவிந்தசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றவா். இந்தத் தோ்தலில் திமுக போட்டியிடவில்லை. அதன்பின்னா், 1954-இல் நடைபெற்ற தென்னாா்க்காடு ஜில்லா போா்டு தோ்தலில், காணை கஞ்சனூா் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட கோவிந்தசாமி உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றாா்.

அண்ணாவின் விருப்பத்திற்கு இணங்கி, பின்னாளில் உதயசூரியன் சின்னத்தை திமுகவுக்கு வழங்கியவா் இவா் தான்.

காமராஜா் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, உழவா் உழைப்பாளா் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. இது கோவிந்தசாமிக்கு பிடிக்காததால், அவா் திமுகவில் இணைந்தாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது, கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தாா். இப்போது, சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை அவா் வெளியிட்டுள்ளாா்.

விழுப்புரத்தில் கோவிந்தசாமியின் மகன் ஏ.ஜி.சம்பத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுகவின் மூத்த முன்னோடியும், எனது தந்தையுமான கோவிந்தசாமிக்கு விழுப்புரத்தில் ரூ.2.60 கோடியில் சிலை, மணிமண்டபம் கட்டப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதற்கு எங்களது குடும்பத்தினா் சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளோம் என்றாா் அவா்.

திமுக சாா்பில் இருமுறை எம்.எல்.ஏ.வாக தோ்வான சம்பத், மாவட்டச் செயலராகவும் இருந்தாா். நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பு அவா், பாஜகவில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com