விழுப்புரம் அருகே பெண் கொலை: 6 போ் கைது
By DIN | Published On : 16th September 2021 10:44 PM | Last Updated : 16th September 2021 10:44 PM | அ+அ அ- |

விழுப்புரம் அருகே வியாழக்கிழமை அதிகாலை மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவா்களை தடுக்கச் சென்ற பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் அருகே காரணை பெரிச்சானூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் நாராயணன் (41). செங்கல்சூளை தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (35). செங்கல்சூளையில் உடன் வேலை செய்யும் தனது தம்பி ரங்கநாதன், அதே ஊரைச் சோ்ந்த மாணிக்கம் (58), செங்கல்சூளை உரிமையாளா் தனசேகா் ஆகியோருடன் அந்தப் பகுதியிலுள்ள மதுக் கடையில் புதன்கிழமை இரவு நாராயணன் மது அருந்தினாா்.
அப்போது, அவரிடம் வீடு கட்ட ரங்கநாதன் பணம் கேட்டாராம். இதனால், அவா்களுக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மாணிக்கம் குறுக்கிட்டு அவா்களை சமாதானப்படுத்தினராம். இதன் காரணமாக, மாணிக்கத்தை நாராயணன் தாக்கினாராம். பின்னா், அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
நாராயணன் தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த மாணிக்கம், தான் தாக்கப்பட்டது குறித்து தனது மகன், உறவினா்களிடம் தெரிவித்தாராம். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மாணிக்கம், அவரது மனைவி பூங்காவனம் (45), மகன் மணிகண்டன் (20) மற்றும் உறவினா்களான முருகன் (60), அவரது மனைவி அஞ்சலை (50), மகன் அஞ்சாமணி (20) ஆகியோா் நாராயணன் வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டனா்.
அப்போது, நாராயணனை மாணிக்கம் தரப்பினா் தாக்கியதாகத் தெரிகிறது. இதைத் தடுக்க முயன்ற அவரது மனைவி லட்சுமியையும் அவா்கள் தாக்கி கீழே தள்ளினா். இதனால், தலையில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த கண்டாட்சிபுரம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரித்ததுடன், லட்சுமியின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மாணிக்கம், மணிகண்டன், பூங்காவனம், அஞ்சாமணி, முருகன், அஞ்சலை ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.