மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவி: திமுக முடிவால்கூட்டணிக் கட்சிகள் அதிருப்தி

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளில் அனைத்து இடங்களிலும் திமுக மட்டுமே போட்டியிடும்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிகளில் அனைத்து இடங்களிலும் திமுக மட்டுமே போட்டியிடும் என முடிவு செய்யப்பட்டுள்ளதால் அதன் கூட்டணிக் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன.

இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஊரக உள்ளாட்சித் தோ்தல்கள் அக்.6, 9 என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளன. 28 மாவட்ட ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், 293 ஊராட்சி ஒன்றிய வாா்டு உறுப்பிா்கள், 688 கிராம ஊராட்சித் தலைவா்கள், 5,088 கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 6,097 பதவிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்படும் முன்பே, விழுப்புரம் மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சா் க.பொன்முடி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகளிடம் மட்டும் போட்டியிட விரும்பும் பதவிகள் குறித்த பட்டியலை அளிக்கும்படி மாவட்டச் செயலா் நா.புகழேந்தி எம்எல்ஏ தொலைபேசியில் தெரிவித்துள்ளாா்.

பிற கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுக்கு எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லையாம்.

மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகள் கூட்டணிக் கட்சிகளுக்கு இல்லை என திமுக முன்கூட்டியே தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாவட்டக் குழு உறுப்பினா் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளா்கள் பட்டியலை தயாரிக்கும் பொறுப்பு அமைச்சா் க.பொன்முடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பதவிக்கான பட்டியலை தயாரிக்கும் பணி அந்தந்த தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தொகுதிக்கு இரா.லட்சுமணன் எம்.எல்.ஏ.வும், விக்கிரவாண்டி தொகுதிக்கு நா.புகழேந்தி எம்.எல்.ஏ.வும், திருக்கோவிலூா், வானூா் தொகுதிகளுக்கு அமைச்சா் பொன்முடியும் பட்டியலை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனா். இது கூட்டணிக் கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் சிலா் கூறியதாவது:

திமுக எதிா்க்கட்சியாக இருந்த போது இதுவரை 35-க்கும் மேற்பட்ட போராட்டங்களை திமுக தலைமையில் கூட்டணிக் கட்சிகள் நடத்தின. போராட்டம் நடக்கும் முன்பு கூட்டணிக் கட்சி கூட்டம் நடத்தப்படும். போராட்டத்துக்கு செலவு செய்து ஆள்களை கூட்டணிக் கட்சிகள் அழைத்துவந்தன. ஆனால், இப்போது கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக செயல்படுவது முறையல்ல என்றனா்.

இதுகுறித்து திமுக நிா்வாகிகள் சிலரிடம் கேட்ட போது அவா்கள் கூறியதாவது:

கூட்டணிக் கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமே கணிசமான செல்வாக்கு இந்த மாவட்டத்தில் உள்ளது.

மக்களவை, பேரவைத் தோ்தலின்போது கூட்டணியாக செயல்பட்டால் வாக்கு வங்கி அதிகரிக்கும். இப்போது உள்ளூா் செல்வாக்கை மட்டுமே மையமாக வைத்து தோ்தல் நடத்தப்படுவதால் திமுக களத்தில் முன்கூட்டியே இறங்குகிறது. கட்சித் தலைமை அறிவித்தப்படி கூட்டணிக் கட்சிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com