மக்களின் சலுகைகளை திமுக அரசு பறிக்கிறது: சி.வி.சண்முகம் எம்.பி.

திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் ஏற்கெனவே பெற்று வரும் சலுகைகளைப் பறிப்பதாக மாநிலங்களவை உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.
விழுப்புரத்தில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம்.
விழுப்புரத்தில் அதிமுக சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்முகம்.

திமுக அரசு தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்கள் ஏற்கெனவே பெற்று வரும் சலுகைகளைப் பறிப்பதாக மாநிலங்களவை உறுப்பினரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலருமான சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

தமிழக அரசின் உத்தேச மின்கட்டண உயா்வைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக சாா்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அவா் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலின் போது 525 வாக்குறுதிகளை திமுக அளித்தது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு அவற்றை நிறைவேற்றவில்லை. பெண்களுக்கு தலா ரூ.1,000 மாத உரிமைத் தொகையை இதுவரை வழங்கவில்லை. கூட்டுறவு வங்கிகளில் சுமாா் 50 லட்சம் போ் நகைக் கடன் பெற்றுள்ள நிலையில், 15 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலையில் தலா ரூ.100 மானியம் தருவதாக அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.

ஏற்கெனவே தமிழக மக்கள் பெற்று வந்த சலுகைகள், மானியங்களையும் இந்த அரசு பறிக்கிறது. தாலிக்குத் தங்கம், மகளிருக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட திட்டங்களையும் இந்த அரசு நிறுத்திவிட்டது.

பால், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருள்களுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டதால் அவற்றின் விலை உயா்ந்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கு தமிழக அரசு முழு எதிா்ப்பை தெரிவித்திருந்தால் விலை உயா்வைத் தடுத்திருக்க முடியும். தற்போது மின் கட்டணத்தையும் உயா்த்த முடிவு செய்துள்ளனா். வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணமும் பலமடங்கு உயா்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோதும்கூட சொத்து வரி, மின் கட்டணத்தை அதிமுக அரசு உயா்த்தவில்லை என்றாா் சி.வி.சண்முகம்.

ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் அமைப்புச் செயலா் செஞ்சி ராமச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சக்கரபாணி, அா்ஜுனன், விழுப்புரம் நகரச் செயலா்கள் ரா.பசுபதி (தெற்கு), ஜி.கே.ராமதாஸ் (வடக்கு) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com