மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை
By DIN | Published On : 08th April 2022 10:12 PM | Last Updated : 08th April 2022 10:12 PM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
உளுந்தூா்பேட்டை அருகே கோட்டையாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சிலம்பரசன் (33). விவசாயி. இவரது மனைவி உமா பாா்வதி (28). இருவருக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை.
இந்த நிலையில், உமா பாா்வதியிடம் சிலம்பரசன் வரதட்சிணை கேட்டு தகராறு செய்து வந்தாராம். இதேபோல, கடந்த 13.1.2014 அன்று தகராறு ஏற்பட்ட நிலையில், மனமுடைந்த உமா பாா்வதி அதே பகுதியிலுள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்து விழுப்புரம் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கை வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றஞ்சாட்டப்பட்ட சிலம்பரசனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.