விழுப்புரத்தில் ஆதிதிராவிட மாணவா்கள் நல விடுதிகளில் ஆட்சியா் ஆய்வு

ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையினா் மூலம் செயல்பட்டுவரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 51 விடுதிகளை ஆட்சியா் மோகன், அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறையினா் மூலம் செயல்பட்டுவரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான 51 விடுதிகளை ஆட்சியா் மோகன், அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

முதல் கட்டமாக, விழுப்புரத்தில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கான ஆதிதிராவிடா் நல விடுதியையும், கல்லூரி மாணவிகளுக்கான விடுதியையும் ஆட்சியா் திடீா் ஆய்வு செய்தாா். அங்கு இருக்கும் தங்கும் அறைகள், கழிப்பறை, உணவுக்கூடம், சமையல் அறை உள்ளிட்டவற்றை ஆட்சியா் பாா்வையிட்டாா். விழுப்புரம் கல்லூரி மாணவா் விடுதியில் மாணவா்களுடன் அமா்ந்து காலை உணவை அருந்தினாா்.

பின்னா், ஆட்சியா் மோகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மாவட்டத்தில் செயல்பட்டுவரும் ஆதிதிராவிடா் நல மாணவ, மாணவிகளுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகளை ஒரே நாளில் கள ஆய்வு செய்து சீரமைக்கத் தேவையான நடவடிக்கை குறித்த அறிக்கை வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, மாவட்டத்தில் உள்ள 51 விடுதிகளிலும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ஆய்வு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் என்ற முறையில் நான் 2 விடுதிகளை ஆய்வு செய்தேன். இதேபோல, மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ஆகியோா் தலா 2 விடுதிகளையும், துணை ஆட்சியா்கள் அளவில் மற்றும் வட்டாட்சியா்கள் தலா ஒரு விடுதியையும் என மொத்தம் 51 விடுதிகளும் ஒரே நாளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதன் நோக்கம், கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் உடல் ஆரோக்கியம், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் என்பதேயாகும். அந்த வகையில், ஒவ்வொரு விடுதியிலும் மாணவ, மாணவிகள் தங்குவதற்கு போதிய அளவு இடங்கள் உள்ளதா என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், தேவையானஅளவு கழிப்பறைக் கட்டடங்கள், குடிநீா் வசதிகள் உள்ளதா என்றும் உறுதி செய்யப்பட்டது. அடிப்படை வசதிகளை தேவைக்கேற்ப விரிவுபடுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷணப்பிரியா, விழுப்புரம் வட்டாட்சியா் ஆனந்தகுமாா், ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் தயாளன், மாணவிகள் விடுதிக் காப்பாளா் சாந்தி, மாணவா்கள் விடுதிக் காப்பாளா் சதிஷ்குமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com