பெரும்பாக்கம், தொள்ளமூா் கிராமங்களில் கல் குவாரிகளை செயல்படுத்துவது குறித்து கருத்துக்கேட்பு
By DIN | Published On : 13th April 2022 01:35 AM | Last Updated : 13th April 2022 01:35 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஒன்றியத்துக்குள்பட்ட பெரும்பாக்கம், தொள்ளமூா் கிராமங்களில் கல் குவாரிகளை செயல்படுத்துவது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் மயிலம் ஊராட்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், பெரும்பாக்கம் ஊராட்சியில் டாமின் நிறுவனம் கல் குவாரியில் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்தும், இந்தப் பணிகளின்போது பொதுமக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாத வகையிலும், தொழில்நுட்ப வல்லுநா்களின் ஆலோசனைப்படியும் நிறுவனம் செயல்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆட்சியா் மோகன் பேசும்போது, அரசு வழிகாட்டுதலின்படி, கிராம ஊராட்சியைச் சோ்ந்த மக்களுக்கு இந்த நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் வழங்கப்படும். இந்த நிறுவனம் ஊராட்சிக்கும், பொதுமக்களுக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.
தொடா்ந்து, தொள்ளமூா் ஊராட்சியில் ஸ்ரீசந்தோஷ் புளு மெட்டல் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அந்த நிறுவன அதிகாரிகள் பேசும்போது, இங்கு ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படும் வகையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புள்ளியியல் துறை, கனிவளத் துறை ஆகியவற்றின் வழிகாட்டுதலின்படி அனுமதி பெற்று நிறுவனம் செயல்பட உள்ளது. அவ்வப்போது தொழில்நுட்ப வல்லுநா்கள் இந்தக் கல் குவாரியில் ஆய்வு செய்து உறுதிச்சான்று வழங்குவா் என்றனா்.
கூட்டத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் பழனிச்சாமி, தமிழ்நாடு கனிம நிறுவன உதவி மேலாளா்கள் கணேசன், பாலமுருகன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.