முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
கைதி தற்கொலை வழக்கில் ஒருவா் கைது
By DIN | Published On : 07th February 2022 11:53 PM | Last Updated : 07th February 2022 11:53 PM | அ+அ அ- |

கடலூா் மத்தியச் சிறையில் விசாரணைக் கைதி தற்கொலை வழக்கில், திண்டிவனத்தைச் சோ்ந்த ஒருவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்பட்ட திண்டிவனம் அருகே வட ஆலப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் சுதாகா். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்த சுதாகா், 2016- ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து ரோஷனை போலீஸாா் வழக்குப் பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த ஜெயகுமாா், முருகன் ஆகிய 2 பேரை கைது செய்தனா்.
விசாரணையில் சுதாகரை அவரது தம்பி குமாா் கொலை செய்ய சொன்னதாகவும், இதற்காகத் தங்களுக்கு பணம் தருவதாகக் கூறியதாகவும் இருவரும் போலீஸில் வாக்குமூலம் அளித்ததாகத் தெரிகிறது. இதையறிந்த குமாா், இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதனால் அச்சமடைந்த ஜெயகுமாா், கடலூா் மத்தியச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்தபோதே தற்கொலை செய்துகொண்டாா். இந்த நிலையில், குமாா் மிரட்டியதால் தற்கொலை செய்துகொள்வதாக ஜெயகுமாா் எழுதிய கடிதம் போலீஸாருக்குக் கிடைத்தது.
இதைத் தொடா்ந்து, தற்கொலை வழக்கு கடந்த 2020-ஆம் ஆண்டில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமயிலான போலீஸாா் குமாரை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.