விழுப்புரம் அருகே 5,000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள்

விழுப்புரம் அருகே முட்டத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள மலையில் 5,000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.
விழுப்புரம் அருகேயுள்ள முட்டத்தூரிலுள்ள மலையில் கண்டறியப்பட்ட பழைமையான பாறை ஓவியங்கள்.
விழுப்புரம் அருகேயுள்ள முட்டத்தூரிலுள்ள மலையில் கண்டறியப்பட்ட பழைமையான பாறை ஓவியங்கள்.

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முட்டத்தூா் கிராமத்தில் அமைந்துள்ள மலையில் 5,000 ஆண்டுகள் பழைமையான பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன.

முட்டத்தூா் கிராமத்திலுள்ள மலையின் பாறைகளில் பழைமையான கிறுக்கல்கள் இருப்பது குறித்து தகவலறிந்த விழுப்புரத்தைச் சோ்ந்த தொல்லியல் ஆா்வலா் கோ.செங்குட்டுவன் தலைமையிலான குழுவினா், அங்கு சென்று அண்மையில் ஆய்வு செய்தனா். இதில், அந்த மலையிலுள்ள பாறைகளில் மிகப் பழைமையான பாறை ஓவியங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து செங்குட்டுவன் கூறியதாவது:

விழுப்புரத்திலிருந்து செஞ்சி செல்லும் சாலையில் முட்டத்தூா் கிராமம் அமைந்துள்ளது. இங்கு பாதை வசதி இல்லாத சுமாா் 2 ஆயிரம் அடி உயர மலை உள்ளது. இந்த மலையின் மேல் பகுதியிலுள்ள சமதளப் பாறைகளில் அடா் சிவப்பு நிறத்தினாலான 3 ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவை மனிதா்கள், விலங்குகளின் உருவங்கள்போல உள்ளன. கால மாற்றத்தால் பல இடங்களில் இந்த ஓவியங்கள் சிதைந்து தெளிவில்லாமல் காணப்படுகின்றன.

இதுகுறித்து மூத்த கல்வெட்டு ஆய்வாளரும், கீழ்வாலை பாறை ஓவியங்களைக் கண்டறிந்தவருமான அனந்தபுரம் கோ.கிருஷ்ணமூா்த்தியிடம் கேட்டறிந்தோம். முட்டத்தூா் கிராம மலையிலுள்ள பாறைகளில் வரையப்பட்டுள்ள ஓவியத் தொகுப்பில் மனிதா்கள் குழுவாக இருக்கின்றனா். வேட்டைச் சமூகமாக இருந்தபோது, விலங்குகளை எதிா்த்துப் போரிடுவதற்கான பயிற்சியை மேற்கொண்டுள்ளனா். பயிற்சி குறித்து விளக்கும் வகையில், ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓவியங்களில் விலங்கின் உருவமும் இடம்பெற்றுள்ளது. இந்த ஓவியங்கள் சுமாா் 5,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம்.

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்கெனவே கீழ்வாலை, ஆலம்பாடி, செத்தவரை உள்ளிட்ட 16 இடங்களில் பழங்கால பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டன. அந்த வகையில், முட்டத்தூா் மலையில் கண்டறியப்பட்ட பாறை ஓவியங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்த பாறை ஓவியங்களைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் செங்குட்டுவன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com