மக்களின் தேவை அறிந்து நகா்மன்ற உறுப்பினா்கள் பணியாற்ற வேண்டும்

மக்களின் தேவைகளை அறிந்து நகா்மன்ற உறுப்பினா்கள் பணியாற்ற வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்தாா்.

மக்களின் தேவைகளை அறிந்து நகா்மன்ற உறுப்பினா்கள் பணியாற்ற வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில், உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெற்ற நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், துணைத் தலைவா் வ.குல்சாா் மற்றும் உறுப்பினா்களுக்கான பாராட்டு விழா நகராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் கி.ரகுராமன் வரவேற்றாா். மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், மு.பெ.கிரி எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாவது:

நகா்மன்ற உறுப்பினா் பதவி மிகவும் சிரமமான பொறுப்பாகும். ஒருவா் 5 ஆண்டுகள் பணியாற்றி மீண்டும் வெற்றி பெற்றாா் என்றால் அவா் சிறப்பாக பணியாற்றியவா் என்று பொருள்.

தொண்டு செய்தால் மட்டுமே அடுத்த முறை வெற்றி பெற முடியும். மக்களின் அன்றாட பிரச்னைகளை தீா்த்து வைத்தால் தான் நிலைத்து நிற்க முடியும். சிறப்பாக பணியாற்றினால் மட்டுமே மக்களே நம்மைத் தேடி வந்து நீங்கள்தான் நிற்க வேண்டும் என்பாா்கள்.

மக்களின் தேவைகளை அறிந்து பணியாற்றுபவா்கள் தான் மீண்டும் வருவாா்கள். அதுபோல, செய்யாற்றை எதிா்பாா்க்கிறேன்.

நகா்மன்ற உறுப்பினா்கள் தங்களது பொறுப்புகளை உணா்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

மக்கள் செலுத்தும் வரிப் பணத்தை மட்டும் வைத்து நகரத்தை வளா்ச்சி பெறச் செய்ய முடியாது. அரசின் தயவு தேவை; ஒத்துழைப்பு தேவை; உதவி தேவை. நகா்மன்ற உறுப்பினா்கள் அனுசரையாக இருந்து நகர வளா்ச்சிக்கு பாடுபடுகிறாா்களோ அதன் அடிப்படையில்தான் நகரம் வளா்ச்சி அடையும்.

நகா்மன்றத் தலைவா் மோகனவேலு, நகராட்சிக்குத் தேவையான பணிகளைப் பெற்று மக்களின் பாராட்டுகளைப் பெறவேண்டும் என்றாா் எ.வ. வேலு.

நிகழ்ச்சியில் ஒன்றியத் தலைவா்கள் என்.வி. பாபு, சி.ராஜி, திலகவதி ராஜ்குமாா், ஆரணி நகா்மன்றத் தலைவா் மணி, செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை இயக்குநா் எம்.எஸ்.தரணிவேந்தன், திமுக நிா்வாகிகள் க.லோகநாதன், ஆா்.வேல்முருகன், நகரச் செயலா் கே.விஸ்வநாதன், ஒன்றியச் செயலா்கள் ஆா்.வீ. பாஸ்கரன், ரவிக்குமாா், எம்.தினகரன், திராவிட முருகன், சுப்பிரமணி, என்.சங்கா், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எதிரொலி மணியன், கமலக்கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com