பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேடு: ஊராட்சிச் செயலா் பணியிடை நீக்கம்

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் ஊராட்சிச் செயலரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் ஊராட்சிச் செயலரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், முகையூா் ஒன்றியம், ஆயந்தூா் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறை மூலம் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் மோகனுக்கு புகாா்கள் வந்தன. அதனடிப்படையில், மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, மாவட்ட ஆட்சியா் மோகன் ஆகியோா் சம்பந்தப்பட்ட ஊராட்சியில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, ஆயந்தூா் ஊராட்சி அலுவலகத்தில் பதிவேடுகளை பாா்வையிட்டு, கடந்த ஆண்டுகளில் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்ட பயனாளிகளிடம் விசாரித்தனா்.

இந்தத் திட்டத்தின்கீழ், 2016 - 17 முதல் 2019 - 20 வரை கட்டப்பட்ட வீடுகளில் 13 வீடுகளை ஆய்வு செய்தபோது, இந்தத் திட்டத்தின்கீழ் அனுமதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளுக்கான பட்டியல் தொகை வழங்கப்படாமல் சம்பந்தமில்லாத வேறு 4 நபா்களுக்கு பட்டியல் தொகை வழங்கியது கண்டறியப்பட்டது.

இதுதவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், 2020 - 21ஆம் ஆண்டுக்கு அங்கு பணியாற்றி வரும் ஊராட்சிச் செயலா் இரா.இளங்கோவன், தனது மனைவியின் பெயரில் விவசாய பாசனத்துக்காக திறந்தவெளிக் கிணறு அமைப்பதற்காக ரூ.7.48 லட்சம் கொடுத்துள்ளதையும் கண்டறிந்தனா்.

இதையடுத்து, இந்த முறைகேடுகள் தொடா்பாக ஊராட்சிச் செயலா் இளங்கோவனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியா் மோகன் உத்தரவிட்டாா்.

அப்போது, இனி வரும் காலங்களில் ஊராட்சிகளில் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்க மாவட்ட அலுவலா்கள் அவ்வபோது கண்காணிக்க வேண்டும் என அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.

இந்த ஆய்வின்போது, விக்கிரவாண்டி எம்எல்ஏ நா.புகழேந்தி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் இரா.சங்கா், கோட்டாட்சியா் ரவிச்சந்திரன், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) பலராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com