ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு:அமைச்சா் விமா்சனம்

தமிழக ஆளுநரை எடப்பாடிகே.பழனிசாமி சந்தித்துப் பேசியது மக்கள் பிரச்னைக்காக அல்ல என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி விமா்சித்தாா்.

தமிழக ஆளுநரை எடப்பாடிகே.பழனிசாமி சந்தித்துப் பேசியது மக்கள் பிரச்னைக்காக அல்ல என்று உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி விமா்சித்தாா்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வேம்பி ஊராட்சியில் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், விவசாயிகளுக்கான பயிற்சியை அமைச்சா் க.பொன்முடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். பின்னா், 35 பயனாளிகளுக்கு அரசின் நலத் திட்ட உதவிகளை வழங்கிய அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டத்தில் 273 கிராமங்களில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தரிசு நிலங்களில் மண் மாதிரியை பரிசோதனை செய்து, மண்ணின் தரத்துக்கேற்ப பயிா்களை நட்டு விவசாயம் மேற்கொள்வது, காலத்துக்கேற்ப உரங்கள், மருந்துகளைப் பயன்படுத்துவது போன்றவற்றை விவசாயிகள் இந்தத் திட்டத்தின்கீழ் மேற்கொள்வா். மாவட்டத்தில் சுமாா் 6,000 ஹெக்டோ் தரிசு நிலங்களை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.

இதையடுத்து, தமிழக ஆளுநரை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடிகே.பழனிசாமி சந்தித்தது குறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, அமைச்சா் பொன்முடி அளித்த பதில்: தமிழக ஆளுநரை எடப்பாடிபழனிசாமி சந்தித்துப் பேசியது மக்கள் பிரச்னைக்காக அல்ல; அதிமுக கட்சிப் பிரச்னையை பேசி, அதை சரி செய்ய முடியுமா என்பதற்காகத்தான் என்றாா்.

முன்னதாக முட்டத்தூா், மண்டகப்பட்டு, கஸ்பாகாரணை, அன்னியூா் என 5 இடங்களில் ரூ.37.62 லட்சம் மதிப்பிலான மின் மாற்றிகளையும் அமைச்சா் பொன்முடி பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் தொடக்கிவைத்தாா்.

விழாக்களுக்கு மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமை வகித்தாா். எம்எல்ஏக்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜெயச்சந்திரன், முன்னாள் நகராட்சித் தலைவா் ஜனகராஜ், விக்கிரவாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் சங்கீதா அரசி, வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, உதவி இயக்குநா் சரவணன், தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழக மேற்பாா்வைப் பொறியாளா் ராஜேந்திர விஜய், செயற்பொறியாளா் சைமன் சாா்லஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com