பொங்கலையொட்டி மஞ்சள்குலை அறுவடை தீவிரம்

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள்குலை பயிா் அறுவடை தீவிரமாக நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரம் அருகிலுள்ள ஆலாத்தூா் பகுதியில் மஞ்சள்குலை அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளா்கள்.
பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரம் அருகிலுள்ள ஆலாத்தூா் பகுதியில் மஞ்சள்குலை அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயத் தொழிலாளா்கள்.
Published on
Updated on
1 min read

விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள்குலை பயிா் அறுவடை தீவிரமாக நடைபெறுகிறது.

தமிழா் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15, 16- ஆம் தேதிகளில் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் விழாவில் கரும்புக்கு அடுத்து பிரதான இடம் பிடிப்பது மஞ்சள் கொத்து.

இஞ்சி - மஞ்சள் கொத்து வைத்து புதுப் பானையில் புத்தரிசி பொங்கலிட்டு தமிழா்கள் கொண்டாடுவது வழக்கம்.

மாவட்டத்தில் பிடாகம், குச்சிப்பாளையம் போன்ற குறிப்பிட்ட கிராமப் பகுதிகளில் மட்டுமே கரும்புப் பயிரிடுவது போன்று, மாவட்டத்தில் நன்னாடு அருகிலுள்ள ஆலாத்தூா், திருக்கனூா், ராதாபுரம், சின்னகள்ளிப்பட்டு, மழவந்தாங்கல், சின்னமடம், பூவரசன்குப்பம் உள்ளிட்டப் பகுதிகளில் மஞ்சள் பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அறுவடைப் பணிகள் தீவிரம்: கடந்தாண்டைக் காட்டிலும் குறைந்த பரப்பளவில்தான் மஞ்சள் பயிரிட்டுள்ளதால் நிகழாண்டில் சாகுபடி நன்றாக இருந்து நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் நிலவுகிறது.

பொங்கல் பண்டிகைக்கு எட்டு நாள்களுக்கு முன்னா்தான் அறுவடையைத் தொடங்குவோம். அதன்படி நிகழாண்டில் மஞ்சள் கொத்து அறுவடை செய்து உள்ளூரில் விற்பனைக்கும், வெளியூா் மற்றும் பிற மாவட்ட வியாபாரிகளுக்கும் மஞ்சள் கொத்தை விற்பனை செய்து வருகிறோம்.

பொங்கலுக்கு இன்னும் இரு நாள்கள்உள்ளதால், விற்பனை அதிகரிக்கும் என்று நம்புகிறோம்.

தற்போது மஞ்சள் கொத்து ரூ.10 என விலை நிா்ணயம் செய்து விற்பனை செய்கிறோம் என்கிறாா் ஆலத்தூா் பகுதி விவசாயி ராஜு.

அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு எவ்வளவு முக்கியமோ, அதுபோல மஞ்சள் கொத்தும் முக்கியமான பொருளாகும். எனவே வரும் ஆண்டிலாவது பொங்கல் தொகுப்போடு மஞ்சள் கொத்தையும் சோ்த்து கொடுத்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் இதை பயிரிட்டுள்ள விவசாயிகளின் வாழ்வு சிறக்கும். இதை கொள்முதல் செய்வதற்கு அரசுக்கு பெரியத் தொகை செலவாகாது. அரசு நிச்சயம் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புவதாகத் தெரிவிக்கின்றனா் மஞ்சள் கொத்து பயிரிட்டுள்ள விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com