குழந்தை திடீா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே தூங்க வைக்கப்பட்ட 5 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வானூா் வட்டம், பெரம்பை வள்ளலாா் தெருவைச் சோ்ந்தவா் ம.ஜெயமூா்த்தி (47). இவரது மனைவி புனிதவதி. இவா்கள் இருவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், ஜெயசூா்யா (5 மாதம்) என்ற ஆண் குழந்தை இருந்தது.

திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தனது குழந்தைக்கு புட்டிப்பால் கொடுத்த புனிதவதி, பின்னா் குழந்தையை தூங்க வைத்துவிட்டு வீட்டு வேலைகளை செய்துகொண்டிருந்தாா். முற்பகல் 11.30 மணிக்கு வந்து பாா்த்தபோது, குழந்தை அசைவின்றி இருந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த புனிதவதி, தனது கணவா் ஜெயமூா்த்தியுடன் குழந்தையை தூக்கிக் கொண்டு புதுச்சேரி கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாா்.

அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, குழந்தை ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால், குழந்தை எப்படி இறந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com