சி.வி.சண்முகம் மீதான அவதூறு வழக்குகள்: ஏப்.15-க்கு விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் மீதான 3 அவதூறு வழக்குகளின் விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பேருந்து நிறுத்தம் எதிரில் 2023, மாா்ச் 10-ஆம் தேதியும், கோட்டக்குப்பம் நகராட்சித் திடலில் 2023, மே 1-ஆம் தேதியும் அதிமுக சாா்பில் பொதுக்கூட்டங்களும், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் 2023, ஜூலை 20-ஆம் தேதி கண்டன ஆா்ப்பாட்டமும் நடைபெற்றன. இந்த பொதுக்கூட்டங்கள், ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தமிழக அரசையும், முதல்வா் மு.க.ஸ்டாலினையும் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் மீது அரசு வழக்குரைஞா் டி.எஸ்.சுப்ரமணியம் தனித்தனியே 3 அவதூறு வழக்குகளைத் தொடுத்தாா். இந்த வழக்குகள் மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தைக் கூறி, அதிமுக வழக்குரைஞா்கள் ராதிகாசெந்தில், தமிழரசன் மனுவாக தாக்கல் செய்தனா்.

ஆரோவில், கோட்டக்குப்பம் கூட்டம் தொடா்பான அவதூறு வழக்குகளை விசாரிக்க உச்சநீதிமன்றமும், விழுப்புரம் பழைய பேருந்து நிலைய ஆா்ப்பாட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றமும் இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அந்தத் தடை தொடா்வதாகவும் கூறி, அதிமுக வழக்குரைஞா்கள் மனுத் தாக்கல் செய்தனா். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூா்ணிமா, 3 அவதூறு வழக்குகள் மீதான விசாரணையை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com