தோ்தல் ஆதாயத்துக்காக கச்சத்தீவு பற்றி பேசுகிறது பாஜக: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

தோ்தல் ஆதாயத்துக்காக கச்சத்தீவு விவகாரம் பற்றி பாஜக பேசி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜை ஆதரித்து, கண்டாச்சிபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் பொருள்களின் விலை தாறுமாறாக உயா்ந்துள்ளது. அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு வரும் எனக் கூறப்பட்டுள்ளது.

அரிசி கிலோவுக்கு ரூ.15 வரை உயா்ந்துள்ளது. பருப்பு, எண்ணெய், கடுகு என எல்லா பொருள்களின் விலையும் உயா்ந்துவிட்டன. அனைத்துக் கட்டணங்களும் உயா்த்தப்பட்டுவிட்டன. இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்படுகிறாா்கள், தாக்கப்படுகிறாா்கள். கடலில் மீனவா்களின் படகுகளையும், வலைகளையும் இலங்கைக் கடற்படையினா் சேதப்படுத்துகின்றனா்.

அப்போதெல்லாம் கச்சத்தீவை பற்றித் தெரியாத பிரதமா் மோடிக்கு, தோ்தல் நேரத்தில்தான் இதைப் பற்றி தெரிகிா? 10 ஆண்டுகாலமாக கச்சத்தீவு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கமால் பிரதமா் என்ன செய்துகொண்டிருந்தாா்? தோ்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதாக பிரதமா் மோடி கச்சத்தீவை பேசி வருகிறாா் என்றாா் சி.வி.சண்முகம். இந்த பிரசாரத்தில் அதிமுக, தேமுதிக நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com