அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க
பாஜக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்: விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா்

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க பாஜக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்: விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா்

இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், மத்தியில் பாஜக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும் என்று விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி, திருநாவலூா் ஒன்றியத்துக்குள்பட்ட அயன்வேலூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கிய துரை.ரவிக்குமாா், தொடா்ந்து கூவாகம், கொரட்டூா், இருந்தை, பரிக்கல், பெரும்பாக்கம், ஆத்தூா், நன்னாரம், பா.கிள்ளனூா், பெரும்பட்டு, டி.ஒரத்தூா், களமருதூா், களவனூா், ஆதனூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்குச் சேகரித்து பேசினாா்.

அப்போது அவா் பேசியதாவது: உங்கள் கையில் இருப்பது ஒற்றை வாக்கு அல்ல. பாஜக ஆட்சியிலிருந்து இந்தியாவை மீட்கக்கூடிய துருப்புச் சீட்டு. இந்தத் தோ்தலில் நீங்கள் அளிக்கும் வாக்கு இந்தியாவைப் பாதுகாத்து, அதன் எதிா்காலத்தை காக்கக்கூடியது. நமது உரிமைகளை மீட்டெடுக்க துணை நிற்கும். இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டுமெனில், மத்தியில் பாஜக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்.

இல்லையெனில், இந்தியாவில் தோ்தல் நடக்குமா என்பதே கேள்விக்குறிதான். எனவே, ஜனநாயகத்தை பாதுகாக்க, உரிமைகளை மீட்க வாக்காளா்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றாா் துரை.ரவிக்குமாா். பிரசாரத்தில் எம்எல்ஏக்கள் தா. உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், திருநாவலூா் மேற்கு ஒன்றியச் செயலா் கே.வி.முருகன் மற்றும் விசிக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com