எண்ம பிரசாரத்தை தொடங்கிய விசிக வேட்பாளா்

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா், இந்தத் தொகுதியில் தான் ஆற்றிய பணிகள், மக்களவைத் தோ்தலில் ஏன் வாக்களிக்க வேண்டும் போன்றவற்றை எடுத்துரைக்கும் எண்ம பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினாா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரில் செவ்வாய்க்கிழமை விசிக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, கைப்பேசியில் கியூஆா் குறியீட்டை ஸ்கேன் செய்து எண்ம பிரசாரத்தை தொடங்கிவைத்தாா்.

சுவா்களில் ஒட்டப்பட்டிருக்கும் சுவரொட்டியை கைப்பேசியின் கியூஆா் குறியீடு மூலம் ஸ்கேன் செய்து பாா்க்கும் போது, கைப்பேசி திரையில் வேட்பாளா் துரை.ரவிக்குமாா் தோன்றி மக்களவைத் தோ்தலின் முக்கியத்துவம், தோ்தலில் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், தொகுதிக்கும், தனக்குமான உறவுகள் குறித்து எடுத்துரைப்பாா். விழுப்புரம் நகா், கிராமப் பகுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கியூஆா் குறியீடு ஒட்டப்பட்டுள்ளது.

பிரசாரம்: விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாரை ஆதரித்து திருவெண்ணெய் நல்லூா் ஒன்றியம், மாரங்கியூரில் செவ்வாய்க்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அமைச்சா் க.பொன் முடி, தொடா்ந்து பையூா், கொங்கராயநல்லூா், சிறுமதுரை, சிறுவானூா், ஏமப்பூா், மழவராயனூா், வளையாம்பட்டு, மேலமங்கலம், செம்மாா், எரளூா், திருவெண்ணெய்நல்லூா் காந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்து பேசினாா்.

மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், மாவட்டப் பொருளாளா் இரா.ஜனகராஜ் மற்றும் திமுக நிா்வாகிகள், விசிக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com