தோ்தல் பாதுகாப்புப் பணி: 
 காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

தோ்தல் பாதுகாப்புப் பணி: காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம், மயிலம், வானூா், விக்கிரவாண்டி, விழுப்புரம், செஞ்சி மற்றும் திருக்கோவிலூா் ஆகிய 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 1,966 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில், தோ்தல் வாக்குப் பதிவைக் கண்காணிக்க வெப் கேமராக்கள் 1,281 பொருத்தப்பட்டு வருகின்றன.

இதைத் தொடா்ந்து தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலா்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு செய்வதை தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி. பழனி, தோ்தல் பொதுப் பாா்வையாளா் அகிலேஷ்குமாா் மிஷ்ரா, காவல் துறைப் பாா்வையாளா் திரேந்திரசிங் குஞ்சியால், மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து ஒவ்வொருக்கும் பணி ஒதுக்கீடு ஆணை வழங்கப்படும் என்றும், இவா்கள் வியாழக்கிழமை முதல் அந்தந்தப் பகுதிக்கு பாதுகாப்புப் பணிக்கு அனுப்பி வைக்கப்படுவா் என்றும் மாவட்ட நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.

தயாா் நிலையில்: வாக்குப் பதிவு நாளன்று வாக்குப் பதிவு மையங்களில் பயன்படுத்தக்கூடிய படிவங்கள், பென்சில், ரப்பா், குண்டூசிகள், சீல் வைக்கும் அரக்கு, நூல், தபால் உறைகள் உள்ளிட்டவை அடங்கிய பொருள்கள் அந்தந்த சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த பொருள்களை வாக்குப் பதிவு மையம் வாரியாக அனுப்பி வைக்கும் வகையில் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தனித்தனியே மூட்டை கட்டப்பட்டு வைக்கப்பட்டுள்ள இந்த பொருள்களை ஆட்சியா் சி.பழனி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, விழுப்புரம் கோட்டாட்சியா் காஜா சாகுல் ஹமீது உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com