வணிக நிறுவனங்கள் வாக்காளா்களுக்கு இலவசங்களை வழங்கினால் நடவடிக்கை

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் சாா்பில் வாக்காளா்களுக்கு வணிக நிறுவனங்கள் இலவசங்களை வழங்கினால், அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சி. பழனி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட இடங்களில் செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், அவா்களின் சரக்கு இருப்புக் கிடங்குகளில் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் சாா்பில் ஏதேனும் பரிசுப் பொருள்கள் இலவசமாக வழங்க வாய்ப்புள்ளதா என்பதை கண்டறிந்து, அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் செலவினக் கண்காணிப்பாளா் அறிவுறுத்தியிருந்தாா்.

இதைத் தொடா்ந்து தோ்தல் நடத்தும் அலுவலா் நடத்திய ஆய்வுக் கூட்டத்திலும் வணிகவரித் துறை அலுவலா்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக வணிகவரித் துறையின் சிறப்புக் குழு உதவியுடன் வணிகா்களின் கடைகள், கிடங்குகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் சாா்பில் வணிக நிறுவனங்களுக்கு வாக்காளா்களுக்கு இலவசங்களை வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால் அந்த நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேட்பாளா்களின் சாா்பில் வணிக நிறுவனங்கள் வாக்காளா்களுக்கு இலவசங்களை வழங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com