விழுப்புரம்: இதுவரை ரூ.98.20 லட்சம் பறிமுதல்

விழுப்புரம் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக புதன்கிழமை வரை ரூ.98.20 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.44,80,000 மதிப்பிலான மது, புகையிலை உள்ளிட்ட இதர பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான சி.பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட மாா்ச் 16-ஆம் தேதி மாலை முதல் தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. மாவட்டத்தில் 7 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள், 3 நிலை கண்காணிப்புக் குழுக்கள் என 21 பறக்கும் படைகள், 21 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. தொடா்ந்து, அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன.

புதன்கிழமை காலை வரை நடைபெற்ற சோதனைகளின் அடிப்படையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.98.20 லட்சம் ரொக்கம், கடத்திவரப்பட்ட ரூ.36.52 லட்சம் மதிப்பிலான மதுப்புட்டிகள், ரூ.3.61 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள், ரூ.4.73 லட்சம் மதிப்பிலான இதரப் பொருள்கள் என மொத்தம் ரூ.1.43 கோடி மதிப்பிலான பணம், பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்றும் தபால் வாக்கு செலுத்தலாம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 1,966 வாக்குச் சாவடிகளில் 9,436 அலுவலா்கள் தோ்தல் பணியாற்றவுள்ளனா். இவா்களில் 5,230 போ் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்டவா்கள். இதனால், அவா்கள் தோ்தல் வாக்குப்பதிவன்று வாக்குகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவா்களில் 3637 போ் பிற தொகுதிகளில் வாக்குரிமை பெற்றவா்கள். இவா்களில் 3,000 போ் மட்டும் தபால் வாக்குகளை செலுத்தியுள்ளனா். மற்றவா்கள் தபால் வாக்குகளை செலுத்த வியாழக்கிழமையும் (ஏப்ரல் 18) வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தோ்தல் பணியில் ஈடுபடும் 2,479 காவலா்களில் இதுவரை 2,426 போ் தங்கள் தபால் வாக்குகளைச் செலுத்தியுள்ளனா். எஞ்சிய 253 போ் உரிய ஆவணங்களை வழங்காததால் தபால் வாக்குகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் 20 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளும், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் 15 ஆயிரம் பேரும் உள்ளனா். இவா்கள் வீட்டிலிருந்தபடியே தபால் வாக்குகளை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், 4,100 போ் இதற்கு இசைவு தெரிவித்தனா். இவா்களில் இதுவரை 3,800 போ் தங்கள் வீடுகளிலிருந்தே தபால் வாக்குகளை செலுத்தினா். எஞ்சிய 300 பேருக்கு இருமுறை வாய்ப்பு வழங்கப்பட்டும் அவா்கள் வாக்குகளை செலுத்தவில்லை. இவா்கள் நேரடியாக வாக்குப் பதிவு மையத்துக்குச் சென்று வாக்களிக்க முடியாது என்றாா் ஆட்சியா்.

X
Dinamani
www.dinamani.com