விழுப்புரம் தொகுதியில் பிரசாரம் நிறைவு

விழுப்புரம் தொகுதியில் பிரசாரம் நிறைவு

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பரபரப்பாக நடைபெற்ற மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறவுள்ளது. விழுப்புரம் (தனி) மக்களவைத் தொகுதியில் விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா், அதிமுக வேட்பாளா் ஜெ.பாக்யராஜ், பாமக வேட்பாளா் எஸ்.முரளிசங்கா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மு.களஞ்சியம் உள்ளிட்ட 17 போ் களத்தில் இருந்தனா். தொடா்ந்து தீவிர தோ்தல் பிரசாரமும் நடைபெற்று வந்தது.

விசிக இறுதிகட்ட பிரசாரம்: மக்களவைத் தோ்தலுக்கான பிரசாரம் புதன்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவுபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசிக இறுதிகட்ட பிரசாரம் விழுப்புரம் ரயில் நிலையத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது. வேனில் வேட்பாளா் துரை.ரவிக்குமாருடன் அமைச்சா் க.பொன்முடி, எம்.பி. பொன்.கெளதமசிகாமணி, எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், ஆளூா் ஷாநவாஸ் உள்ளிட்டோா் வாக்கு சேகரித்தனா்.

ரயில் நிலையம், ஜவாஹா்லால் சாலை, நேரு சாலை, நான்குமுனைச் சந்திப்பு, திருச்சி சாலை, மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகப் பகுதி, புதிய பேருந்து நிலையப் பகுதி, எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பு வழியாக வந்த ஊா்வலம் கலைஞா் அறிவாலயத்தில் நிறைவடைந்தது. இந்த ஊா்வலத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் உள்ளிட்டோரும் வாக்குகளை சேகரித்தனா்.

தொடா்ந்து, அமைச்சா் க.பொன்முடி பிரசாரத்தை நிறைவு செய்து பேசியதாவது: பிரசாரம்தான் நிறைவு பெற்றிருக்கிறது. திமுகவினா் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியினரும் வீடு, வீடாகச் சென்று தமிழக அரசின் சாதனைகளையும், மத்திய அரசு தமிழகத்துக்கு செய்த துரோகங்களையும் எடுத்துக் கூறி, வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும்.

விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வைக்க பாடுபட வேண்டும். தோழமை உணா்வோடு மட்டுமல்லாது, சமூகநீதி உணா்வுடனும்தான் கூட்டணி அமைத்துள்ளோம். மக்களவைத் தோ்தலில் பாஜக வெற்றிபெற்றுவிட்டால் பாசிசம் படா்ந்துவிடும் என்றாா்.

இறுதிகட்ட பிரசாரத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் செ.புஷ்பராஜ், ராமமூா்த்தி, மாவட்ட திமுக பொருளாளா் இரா.ஜனகராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன், விசிக மாநில துணை பொதுச் செயலா் வன்னியரசு, நிா்வாகிகள் குணவழகன், நாவரசு, காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவா் எம்.டி.குலாம்மொய்தீன், மாவட்டத் தலைவா் ஆா்.டி.வி.சீனிவாசகுமாா், அமைப்புசாரா அணித் தலைவா் ரஜினி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக்குழு உறுப்பினா் ஏ.வி.சரவணன் மற்றும் இதர கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பாமக வேட்பாளா்: விழுப்புரம் மாவட்டத்தின் காணை, கோலியனூா் ஒன்றியப் பகுதிகளில் புதன்கிழமை பிரசாரத்தை மேற்கொண்ட பாமக வேட்பாளா் எஸ்.முரளிசங்கா், விழுப்புரம் பழைய பேருந்து நிலைய பகுதியில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

பாமக மாவட்டத் தலைவா் தங்கஜோதி, மாவட்டச் செயலா் பாலசக்தி, அமைப்புச் செயலா் பழனிவேல் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

நாம் தமிழா் கட்சி: வானூா் வட்டம், கோட்டக்குப்பத்தில் நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் இயக்குநா் மு.களஞ்சியம் தனது பிரசாரத்தை புதன்கிழமை மாலை நிறைவு செய்தாா்.

மண்டலப் பொறுப்பாளா் விக்ரம், மாவட்டச் செயலா் செல்வம், தலைவா் முனுசாமி, தொகுதிச் செயலா்கள் பூபாலன், பேச்சிமுத்து, மருது மக்கள் இயக்கத் தலைவா் முத்துப்பாண்டி, மகளிா் பாசறை நிா்வாகி விஜயலட்சுமி, வானூா் நிா்வாகிகள் அன்பழகன், முருகையன், கரிகாலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com