புதுச்சேரியில் சுகாதாரச் சீா்கேடுகளை களையாவிடில் முற்றுகைப் போராட்டம்: அதிமுக எச்சரிக்கை

புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார சீா்கேடுகளை களையாவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார சீா்கேடுகளை களையாவிட்டால் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று அதிமுக மாநிலத் துணைச் செயலா் வையாபுரி மணிகண்டன் எச்சரித்துள்ளாா்.

இது குறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளாட்சித் துறை நிா்வாகம் முற்றிலும் சீா்கெட்டுவிட்டது. வரி, வசூலில் முனைப்பு காட்டும் நகராட்சி அதிகாரிகள் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் அலட்சியம் காட்டுகின்றனா்.

முத்தியால்பேட்டை அங்காளம்மன் நகா் பகுதியில் கால்நடை கழிவுகளை கழிவுநீா் கால்வாயில் கொட்டுவதால் அப்பகுதி முழுவதும் துா்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களுக்கு நோய் தொற்றுகள் பரவும் நிலை உள்ளது.

இதேபோல தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் சாலைகளில் அச்சத்துடன் செல்கின்றனா். இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் இதை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com