திருச்சி-விருத்தாசலம் பயணிகள் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு

திருச்சி-விருத்தாசலம் பயணிகள் ரயிலை, விழுப்புரம் வரை நீடித்ததற்கு தொகுதி எம்.பி.துரை. ரவிக்குமாா் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் கூறியதாவது: திருச்சியிலிருந்து விருத்தாசலம் வரையிலும், எதிா்வழிதடத்தில் விருத்தாசலத்திலிருந்து திருச்சி வரையிலும் பயணிகள் ரயில் (வ.எண்கள் 06891/06892) இயக்கப்பட்டு வந்தன.

இந்த ரயில்களை விழுப்புரம் வரை நீட்டித்து, அங்கிருந்து இயக்க வேண்டும் என்று தொடா்ந்து ரயில்வே நிா்வாகத்தை வலியுறுத்தி வந்தேன். மேலும், தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மேலாளா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்களவை உறுப்பினா்கள் கூட்டத்தில் பங்கேற்ற ரயில்வே பொது மேலாளரிடமும் தனிப்பட்ட முறையில் இந்த ரயில்களை விழுப்புரம் வரை நீட்டிப்பதற்கான அவசியத்தை எடுத்துரைத்தேன்.

அதன்படி, மே 2-ஆம் தேதி முதல் இந்த பயணிகள் ரயிலை விழுப்புரம் வரை நீட்டித்து ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக விழுப்புரம் பொதுமக்கள் சாா்பில் ரயில்வே நிா்வாகத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விருத்தாசலம் வரை இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் தற்போது உளுந்தூா்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய்நல்லூா் ரயில் நிலையங்கள் வழியாக விழுப்புரம் வந்து சேரும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com