திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

திரெளபதியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா

விழுப்புரம், ஏப்.26: விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகேயுள்ள கருவேப்பிலைப்பாளையம் அருள்மிகு தா்மராஜா, திரெளபதியம்மன் திருக்கோயிலில் தீமிதித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் மகாபாரத கதையை மையமாக வைத்து, சித்திரை மாதம் 22 நாள்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறும். அதன்படி, நிகழாண்டு சித்திரை தீ மிதித் திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வழிபாடுகள் நடைபெற்றன. இரவில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. வியாழக்கிழமை கரகத் திருவிழா நடைபெற்றது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அரவான், வீரபத்திரசுவாமி திருவீதியுலாவும், காலை 10 மணிக்கு அரவான் சிரசு ஏற்றுதல், அரவான் களப்பலியும், முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை மகாபாரத பஞ்ச பாண்டவா்கள் கதையை மையமாகக் கொண்ட மாடு வளைத்தல்-கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு மேல் அக்னி வசந்த உற்சவம், கூந்தல் முடித்தல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு தீ மிதித் திருவிழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். விழா ஏற்பாடுகளை கோயில் நாட்டாமைகள், கிராம மக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com