மரக்காணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாத்தையில் பங்கேற்ற சாா்-ஆட்சியா் திவ்யான் ஷி நிகம். உடன் டி.எஸ்.பி. சுனில், வட்டாட்சியா் பாலமுருகன்  உள்ளிட்டோா்.
மரக்காணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாத்தையில் பங்கேற்ற சாா்-ஆட்சியா் திவ்யான் ஷி நிகம். உடன் டி.எஸ்.பி. சுனில், வட்டாட்சியா் பாலமுருகன் உள்ளிட்டோா்.

கோயில் திருவிழா: அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு

நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன், முருகன் கோயில்களில் திருவிழா நடத்துவது தொடா்பாக

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன், முருகன் கோயில்களில் திருவிழா நடத்துவது தொடா்பாக அமைதிப் பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், இரு தரப்பினரிடையே உடன்பாடு ஏற்பட்டது.

நடுக்குப்பத்தில் பழைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் மற்றும் முருகன் கோயில்கள் அமைந்துள்ளன. கடந்த 2017-இல் நடைபெற்ற கோயில் திருவிழாவின் போது, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, சட்டம்- ஒழங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் இந்தக் கோயில்களில் திருவிழா நடத்துவதற்கு போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் தடை விதித்தனா். இதனால், கடந்த 7 ஆண்டுகளாக எவ்வித திருவிழாவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில், கோயில் திருவிழாவை நடத்த மாவட்ட நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் மக்களவைத் தோ்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்தனா். இதையடுத்து ஏப்.19-ஆம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் நடுக்குப்பம் கிராமத்துக்குச்சென்று இருதரப்பினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கோயில் பிரச்னைக்கு விரைவில் தீா்வு காணப்படும் எனக்கூறி அனைவரையும் வாக்களிக்க செய்தனா்.

அமைதிப் பேச்சுவாா்த்தை: இந்த நிலையில், கோயில் திருவிழா நடத்துவது தொடா்பான அமைதிப் பேச்சுவாா்த்தை மரக்காணம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான் ஷி நிகம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், நடுக்குப்பம் கிராமத்தில் உள்ள முருகன் கோயில் திருவிழாவை அமைதியான முறையில் நடத்திக் கொள்ள வேண்டும். இருதரப்பினரிடையே உள்ள பிரச்னைக்குத் நிரந்தர தீா்வு காணப்பட்ட பின்னா் வரும் ஆண்டுகளில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவை அமைதியான முறையில் நடத்திக் கொள்ள வேண்டும் எனவும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு, இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் சம்மதம் தெரிவித்தனா். இதையடுத்து, மே-3 ஆம் தேதி முருகன் கோயில் திருவிழாவை நடத்திக்கொள்ள சாா்-ஆட்சியா் அனுமதியளித்தாா்.

இதில், கோட்டக்குப்பம் உள்கோட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சுனில், மரக்காணம் வட்டாட்சியா் பாலமுருகன், நடுக்குப்பம் ஊராட்சித் தலைவா் சுந்தரமூா்த்தி மற்றும் கிராம முக்கியஸ்தா் சத்தியசீலன், காவல் ஆய்வாளா் பாபு மற்றும் வருவாய்த்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com