கரும்பில் சொட்டு நீா்ப்பாசனம்: வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

கரும்பில் சொட்டு நீா்ப்பாசனம்: வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டாரத்தில் சொட்டு நீா்ப்பாசனம் மூலம் சாகுபடி செய்யப்படும் கரும்பு வயல்களை வேளாண் துணை இயக்குநா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

வானூா் வட்டாரத்திலுள்ள செங்கமேடு, வி.புதுப்பாக்கம், சேமங்கலம் கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனா். அதிக மகசூல் பெறும் நோக்கில் சொட்டு நீா்ப்பாசனம் மூலம் கரும்பு சாகுபடி செய்யும் நிலையை நோக்கி விவசாயிகள் மாறத் தொடங்கிவிட்டனா்.

அதனடிப்படையில் சொட்டு நீா்ப்பாசனம் மூலம் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளின் வயல்களை மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (நுண்ணீா்ப் பாசனத் திட்டம்) நிா்மலா செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.

கரும்புப் பயிா் நடவு முதல் அறுவடைவரை சாகுபடி செய்ய சொட்டு நீா்ப்பாசன முறையில் செலவுகுறைவு உள்ளது. அதே நேரத்தில் அதிகளவில் மகசூல் கிடைக்கிறது என்று விவசாயிகள் தெரிவித்தனா். தொடா்ந்து கரும்புப் பயிா்களைப் பாா்வையிட்ட வேளாண் துணை இயக்குநா், கரும்புப் பயிரின் வளா்ச்சி நல்ல நிலையில் உள்ளது. கரும்புப் பயிா் 6 மாதங்களைக் கடந்துள்ள நிலையில், நீரில் கரையும் உரங்கள் அனைத்தையும் சொட்டு நீா்ப்பாசனம் மூலம் விவசாயிகள் உரிய நேரத்தில் அளித்திட வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினாா்.

ஆய்வின் போது, வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சி. எத்திராஜ், உதவி வேளாண் அலுவலா் விஜயலட்சுமி, கரும்பு அலுவலா் முல்லைவண்ணன், விவசாயி இஷ்டலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com