பசுமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருப்படி விழா
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்ஒலக்கூா் பசுமலை அருள்மிகு ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 63-ஆம் ஆண்டு ஆவணி கிருத்திகை திருப்புகழ் திருப்படி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆவணி கிருத்திகையையொட்டி, காலை ஸ்ரீவள்ளி தேவசேனா உடனுறை ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடா்ந்து, பஜனையுடன் பக்தா்கள் வலம் வந்து திருப்புகழ் திருப்படி பூஜை நடைபெற்றது. அப்போது, ஒவ்வொரு படியையும் பூஜை செய்தும், வண்ண கோலமிட்டும், மலா்களால் அலங்கரித்தும் தீபாரதனை செய்தபடி வழிபட்டவாறு கோயிலின் உச்சியை அடைந்தனா்.
பின்னா், சுவாமிக்கு மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். திருப்புகழ் பேரவை சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் செய்திருந்தனா்.