ரூ.86.25 கோடியில் கட்டப்பட்ட எல்லீஸ்சத்திரம் தடுப்பணை: ஆட்சியா் ஆய்வு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூா் கிராமங்களுக்கிடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.86.25 கோடியில் கட்டப்பட்டுள்ள எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டடப் பணிகள், வாய்க்கால்களின் சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் சி.பழனி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம், சுப்பூா் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு மூலம் 13,100 ஏக்கா் பாசன வசதி பெற்றுவந்தன. கடந்த 2021-ஆம் ஆண்டு பெய்த பலத்த மழையால் இந்த அணைக்கட்டு சேதமடைந்தது. இதனால், விவசாயிகளுக்கு பாசன வசதி கிடைக்கவில்லை. இதையடுத்து, புதிய அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் விடுத்த கோரிக்கையின்படி, ரூ.86.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னா், விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் மற்றும் கப்பூா் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கட்டப்பட்டது.
இந்த நிலையில், அணையின் கட்டுமானப் பணிகள் மற்றும் அணையிலிருந்து செல்லும் பிரதான கால்வாய்களின் சீரமைப்புப் பணிகளை விழுப்புரம் ஆட்சியா் சி. பழனி திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, அவா் தெரிவித்ததாவது:
இந்த அணைக்கட்டின் வலது புறமுள்ள பிரதான கால்வாய்களான எரளூா் ரெட்டி வாய்க்கால்கள் மற்றும் இடது புறமுள்ள ஆழங்கால், மரகதபுரம், கண்டம்பாக்கம் ஆகிய வாய்க்கால்கள் 26 ஏரிகள் மற்றும் 13, 100 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணைக்கட்டைச் சுற்றியுள்ள 36 கிராமங்களின் நிலத்தடி நீா் மட்டம் உயா்வதோடு, விவசாயம் மற்றும் குடிநீா் ஆதாரம் மேம்படும். தற்போது வரை 99 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. எஞ்சியுள்ள பணிகள் அனைத்தும் 10 நாள்களுக்குள் முடிக்கப்படும். நீா்வளத்துறை வல்லுநா் குழுவின் வழிகாட்டுதலின்படி, அணைக்கட்டு கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு கட்டுமானப்பணி நிறைவுக்கு பின்னா் தர நிா்ணயம் செய்யப்பட்டு அடுத்த நிலையிலான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நல்ல முறையிலும், உறுதியான நிலையிலும் அணை கட்டப்பட்டுள்ளது. விவசாயிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் தடுப்பணையின் இரு பக்கங்களிலும் கரைகளை அமைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அணைக்கட்டில் 500 மீட்டா் தொலைவு பாதுகாப்பு தடுப்புச்சுவா் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயாா் செய்ய துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் சி. பழனி.
ஆய்வின்போது, நீா்வளத்துறை, கீழ்பெண்ணையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் பி.ஷோபனா, உதவி செயற்பொறியாளா் ஐயப்பன், உதவிப் பொறியாளா் மனோஜ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.