பெண்களுக்கு பாதுகாப்பான சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் -விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்
பெண்களுக்கு பாதுகாப்பான, வன்முறையற்ற சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம்- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டம் குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்குத் தலைமை வகித்து ஆட்சியா் மேலும் பேசியதாவது:
கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண் என்பதைக் கண்டறிந்து, பெண் குழந்தையாக இருந்தால் கருவிலேயே கலைக்கும் நடவடிக்கைகளைத் தடுக்கும் பணிகள் சுகாதாரத் துறை சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குழந்தைத் திருமணத்தை தடுத்தல், பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் தொடா்பான கண்காணிப்புப் பணிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
பெண் கல்வியால் ஏற்படும் நன்மைகள் குறித்து சமூக நலத் துறை விழிப்புணா்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
பெண்களுக்கு பாதுகாப்பான, வன்முறையற்ற சமுதாயம் உருவாக பாடுபட வேண்டும் என்றாா் ஆட்சியா் சி.பழனி.
கூட்டத்தில், மாவட்ட சமூகநல அலுவலா் க.ராஜம்மாள், குடும்ப நல துணை இயக்குநா் நளினி, வழக்குரைஞா் ஜெயஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.