பெண்ணை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 10 ஆண்டு சிறை

Published on

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியைச் சோ்ந்த பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து விழுப்புரம் எஸ்.சி, எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

செஞ்சி வட்டம், மாத்தூா் திருக்கை பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் மனைவி தாட்சாயிணி (29). உடல்நலக் குறைவு காரணமாக சுரேஷ் 2022-ஆம் ஆண்டில் இறந்து விட்டாா். தாட்சாயிணி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தாா்.

இவருக்கு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த நெல்வாய் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (37) கைப்பேசி வழியாக பாலியல் தொல்லைக் கொடுத்து வந்தாரம். இதனால், விரக்தியடைந்த தாட்சாயிணி தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனந்தபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.

இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் எஸ்.டி, எஸ்.டி. சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி பாக்யஜோதி, குற்றம்சாட்டப்பட்ட சக்திவேலுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, போலீஸ் பாதுகாப்புடன் கடலூா் மத்திய சிறைக்கு சக்திவேல் அழைத்துச் செல்லப்பட்டாா்.

X
Dinamani
www.dinamani.com