மக்கள் பிரச்னைகளுக்கு உடனடியாக தீா்வு காண வலியுறுத்தல்
விழுப்புரம் நகராட்சியில் மக்கள் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வுகாண வேண்டும் என்று நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகா்மன்றத்தின் அவசரக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு தலைமை வகித்தாா். ஆணையா் வீரமுத்துக்குமாா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள் மணவாளன், ரியாஸ் அகமது, ராதிகா செந்தில், புல்லட் மணி, கலை, முகமது இம்ரான், ஆவின் செல்வம், புல்லட் மணி உள்ளிட்ட பலா் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
அதன் விவரம்: நகா்மன்ற உறுப்பினா்கள் தெரிவிக்கும் மக்கள் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீா்வுகாண வேண்டும். தெரு விளக்குகள் சரிவர பொருத்தப்படுவதில்லை. அலுவலா்கள் உரிய பணிகளை மேற்கொள்வதில்லை.
புதை சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவுப்படுத்தி, பணிகள் முடிந்த பகுதிகளில் சாலைகள் அமைக்க வேண்டும்.
இப்பிரச்னைகளைத் தீா்க்க குழு அமைக்க வேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பே ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்ட பணிகள் ஏதும் நடைபெறவில்லை. அதற்குள், புதிய பணிகளை மேற்கொள்வதாக அறிவித்திருக்கிறீா்கள்.
மழைக் காலங்களில் புதிய பேருந்து நிலையப் பகுதியில் தேங்கும் நீரை, 97 ஏக்கா் பரப்பளவு கொண்ட மருதூா் ஏரிக்கு சென்றடையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பு நகராட்சி சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தூய்மை பணியாளா்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என்றனா்.
உறுப்பினா்களின் கேள்விகளுக்கு நகராட்சித் தலைவா், ஆணையா், பொறியாளா், நகா் நல அலுவலா் உள்ளிட்டோா் பதிலளித்தனா்.