தொழிலாளி கொலை வழக்கு: மூவருக்கு ஆயுள் சிறை
விழுப்புரம் அருகே தொழிலாளி கொலை வழக்கில் சகோதரா்கள் மூவருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், நன்னாடு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவபெருமான் மகன் தனுஷ் (40). இவரது வீட்டின் அருகே வசித்து வந்தவா் கூலித் தொழிலாளியான இருசப்பன் மகன் நாகராஜ் (56). கடந்த 2016 ஏப்ரல் 6-ஆம் தேதி தனுஷ் மனைவி அஞ்சலைக்கும், நாகராஜ் மனைவி சிவகலாக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில், தனுஷ் அவரது சகோதரா்கள் சுரேஷ் (35) வெங்கடேஷ் (38), அஞ்சலை ஆகிய 4 பேரும் சோ்ந்து 2016 ஏப்ரல் 7-ஆம் தேதி நாகராஜை இரும்புக் குழாயால் தாக்கி கொலை செய்தனா். இதுகுறித்து, விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, தனுஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.
இதுதொடா்பான வழக்கு விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், வெள்ளிக்கிழமை விசாரணை முடிவடைந்த நிலையில், தனுஷ், சுரேஷ், வெங்கடேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், கொலை முயற்சி வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி ராஜசிம்மவா்மன் தீா்ப்பளித்தாா். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ள நீதிபதி, வழக்கிலிருந்து அஞ்சலையை விடுதலை செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து, மூவரும் கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்குரைஞராக சுப்பராயலு ஆஜராகினாா்.