விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த கையேட்டை ஆட்சியா் சி.பழனி வெளியிட அதை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, வேளாண் இணை இயக்குநா்  சீனிவாசன் உள்ளிட்டோா்.
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில், வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த கையேட்டை ஆட்சியா் சி.பழனி வெளியிட அதை பெற்றுக்கொள்ளும் விவசாயிகள். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் உள்ளிட்டோா்.

நந்தன் கால்வாய் திட்டம்: விரைந்து தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல்

Published on

நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து தொடங்க வேண்டும் என்று, குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் பலா் பங்கேற்று தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனா்.

அதன் விவரம்: விக்கிரவாண்டி, மயிலம் வட்டாரங்களில் விவசாயிகள் வாங்கிய தக்கைபூண்டு விதைகள் சரியாக முளைக்கவில்லை. எனவே இருவேல்பட்டு, காகுப்பம் பகுதிகளிலுள்ள அரசு விதைப் பண்ணைகளில் தரமான முறையில் விவசாயிகளுக்கு தக்கைபூண்டு வழங்க வேண்டும்.

ஒலக்கூா், மயிலம், காணை ஒன்றியங்களிலுள்ள வேளாண் விரிவாக்க மையக் கட்டடங்கள் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன. இவற்றை சரி செய்யும் வகையில் மூன்று வட்டாரங்களிலும் புதிய வேளாண் விரிவாக்க மையக் கட்டடங்களை கட்ட வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வேளாண் உதவி இயக்குநா் அலுவலகங்களிலும் பொன்னி, பிபிடி விதை இருப்பு வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், கால்நடை மருந்தகங்களில் தேவையான மருந்துகளை இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும், வேளாண் துறை மூலம் விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகளையும் தயாா் நிலையில் வைக்க வேண்டும்.

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்விக் கடன் வழங்க வேண்டும். நந்தன் கால்வாய் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.

விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ஆட்சியா் சி.பழனி, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் பதிலளித்தனா். பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க, கணக்கெடுப்பு நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் பதிலளித்தாா்.

இதைத் தொடா்ந்து வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்த கையேட்டை ஆட்சியா் சி.பழனி வெளியிட, அதை விவசாயிகள் பெற்றுக்கொண்டனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, திண்டிவனம் சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், வேளாண் இணை இயக்குநா் (பொ) சீனிவாசன், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பெரியசாமி, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் சொா்ணலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் பிரேமலதா (வேளாண்), சிவக்கொழுந்து (நிலம்), தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அன்பழகன், நீா்வள ஆதாரத் துறை செயற்பொறியாளா் ஷோபனா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com