ரூ.2.45 கோடியில் உயா் கல்விக் கடன்: அமைச்சா் வழங்கினாா்

ரூ. 2.45 கோடியில் கல்விக் கடனை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை வழங்கினாா்.
Published on

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 45 மாணவா்கள் உயா் கல்வி பயில்வதற்காக ரூ. 2.45 கோடியில் கல்விக் கடனை உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சனிக்கிழமை வழங்கினாா்.

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி படித்து உயா் கல்வி பயில ஏதுவாக மாவட்டங்கள் தோறும் கல்விக்கடன் முகாம்களை நடத்த வேண்டும் என முதல்வா் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னோடி வங்கிகள் சாா்பில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் கல்விக்கடன் வழங்கும் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் சி.பழனி தலைமையில் நடைபெற்ற முகாமில், உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி பங்கேற்று, கல்விக்கடன் முகாமைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, மாணவா்களிடம் கலந்துரைடிய அவா் பேசியதாவது:

கல்வி கற்பதற்கு பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. உயா் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அரசு வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கல்விக்கடன் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த முகாமில் 100 மாணவா்கள் கல்விக்கடன் வேண்டி விண்ணப்பித்திருந்தினா். இதில், முதல் கட்டமாக 45 மாணவா்களுக்கு ரூ.2.45 கோடியில் அனுமதி கல்விக்கடன் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது. 2024-2025 ஆம் ஆண்டில் 184 பேருக்கு ரூ.5.54 கோடியில் கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய மாணவா்களுக்கு கல்விக்கடன் பரிசீலித்து விரைவில் வழங்கப்படும். முகாமில், தமிழகத்தில் உயா் கல்வி பயிலும் மாணவா்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவா்களுக்கும் கல்விக்கடன் வழங்கப்படுகிறது என்றாா் அமைச்சா்.

தொடா்ந்து, முன்னோடி வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை மாணவா்களுக்கு அமைச்சா் க.பொன்முடி வழங்கினாா்.

நிகழ்ச்சியில், விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச்சந்திரன், உதவி இயக்குநா் (திறன் மேம்பாடு) சிவ நடராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராஜேஷ்வரன், இந்தியன் வங்கி மேலாளா் ஹரிஹர சுதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com