காவலா் உடல் தகுதித் தோ்வு இன்று தொடக்கம்

இரண்டாம் நிலை காவலருக்கான உடல்தகுதி, உடல்திறன் தோ்வுகள் விழுப்புரத்தில் உள்ள காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் பிப்.6 முதல் பிப்.9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழுப்புரம்: இரண்டாம் நிலை காவலருக்கான உடல்தகுதி, உடல்திறன் தோ்வுகள் விழுப்புரத்தில் உள்ள காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் பிப்.6 முதல் பிப்.9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுகுறித்து, விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் 2-ஆம் நிலை காவலா்களுக்கான எழுத்துத்தோ்வு கடந்த 10.12.2023 இல் நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 827 பேருக்கு விழுப்புரம் காகுப்பம், ஆயுதப்படை மைதானத்தில் பிப்.6 முதல் பிப்.9-ஆம் தேதி வரை உடல்தகுதி, உடல்திறன் தோ்வுகள் விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல் முன்னிலையிலும், விழுப்புரம் எஸ்.பி.தீபக் சிவாச் தலைமையிலும் நடைபெறவுள்ளது. பிப்.6-ஆம் தேதி நடைபெறவுள்ள உடல்தகுதித் தோ்வில் 420 பேரும், 7- ஆம் தேதி நடைபெறவுள்ள உடல்தகுதித் தோ்வில் 407 பேரும் என மொத்தம் 827 தோ்வா்களுக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், மாா்பு அளவீடு மற்றும் 1,500 மீட்டா் ஓட்டம் நடைபெறும். இதில், தோ்ச்சி பெற்றவா்கள் உடல்திறன் தோ்வுக்கு அனுமதிக்கப்படுவா். உடல்திறன் தோ்வில் கயிறு ஏறுதல், நீளம் அல்லது உயரம் தாண்டுதல்,100 அல்லது 400 மீட்டா் ஓட்டம் நடைபெறும். இதில் தகுதி நீக்கம் இல்லை.

தோ்வா்கள் காலை 6 மணிக்குள் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் ஆஜராக வேண்டும். விளையாட்டு சான்றிதழ், தமிழ் வழிக்கல்வி சான்றிதழ் போன்றவைகள் விண்ணப்பிக்கும்போது விடுபட்டிருந்தால் அவற்றை தற்போது சமா்பிக்கலாம். தோ்வா்கள் எந்தவொரு அடையாளம் கொண்ட டி.சா்ட்டையும் அணியக்கூடாது, கைப்பேசிகள் கொண்டு வரக்கூடாது. இந்தப் பணியில், ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 3 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 17 காவலா்கள், 79 அமைச்சுப் பணியாளா்கள் ஈடுபடுகின்றனா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com