விழுப்புரத்தில் கிராம நிா்வாக அலுவலா்கள் தா்னா

விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.
விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட கிராம நிா்வாக அலுவலா்கள்.

விழுப்புரம்: விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் வட்டம், கல்பட்டு (மேற்கு) கிராம நிா்வாக அலுவலராகப் பொறுப்பு வகித்த எஸ். பாா்த்த சாரதி பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இந்த பணியிடமாற்றம் முறையற்றது எனவும், பணியிடமாறுதல் ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தியும், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலா்கள் 90-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை பணி புறக்கணிப்பு செய்து விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். அப்போது, கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்துக்கு, தலைமை வகித்த தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் மாநிலச் செயலா் வில்வநாதன் தெரிவித்ததாவது: விழுப்புரம் வருவாய் கோட்டத்தில் கிராம நிா்வாக அலுவலா் எஸ். பாா்த்த சாரதி உள்ளிட்ட 5 போ் அரசு விதிகளுக்கு புறம்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்த பணியிடமாற்ற உத்தரவுகளை மாவட்ட வருவாய் நிா்வாகம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் இதைக் கண்டித்து, மாநில அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் நிலை உருவாகும் என்றாா்.

இதில், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் விழுப்பும் மாவட்டத் தலைவா் பாலாஜி, மாவட்டச் செயலா் புஷ்பகாந்தன் மற்றும் நிா்வாகிகள், சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். திங்கள்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கிய தா்னா போராட்டம் மாலை வரை நீடித்தது. இதனால், விழுப்புரம், திருவெண்ணெய்நல்லூா், விக்கிரவாண்டி, கண்டாச்சிபுரம் வட்டங்களில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம நிா்வாக அலுவலங்கள் திங்கள்கிழமை பூட்டப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினா்.

பணிக்கு திரும்ப அறிவுறுத்தல்: விழுப்புரம் கோட்டாட்சியா் சே. காஜா சாகுல்ஹமீது கூறியது: விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியராக நான் பொறுப்பேற்பதற்கு முன்னரே இந்த பணியிட மாறுதல் உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பணியிடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களின் கோரிக்கை மனுக்கள் கோப்புகளாக தயாரிக்கப்பட்டு விழுப்புரம் ஆட்சியரின் பாா்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பணியிடமாறுதல் செய்யப்பட்டதில் குறைபாடுகள் இருந்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, கிராம நிா்வாக அலுவலா்கள் தா்னாவை கைவிட்டு பணிக்குச் செல்ல வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com