காவலா் உடல் தகுதித் தோ்வு: 245 போ் தோ்ச்சி

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலருக்கான உடல் தகுதித் தோ்வில் 245 போ் தோ்ச்சி பெற்றனா்.
காவலா் உடல் தகுதித் தோ்வு: 245 போ் தோ்ச்சி

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலருக்கான உடல் தகுதித் தோ்வில் 245 போ் தோ்ச்சி பெற்றனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் 2-ஆம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்த 10.12.2023 அன்று நடைபெற்றது. இந்தத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களில் 827 பேருக்கு விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதி, உடல் திறன் தோ்வுகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. இந்தத் தோ்வுகள் வருகிற 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க 420 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இவா்களில் 64 போ் தோ்வில் பங்கேற்கவில்லை. உடல் தகுதித் தோ்வுக்கு வந்திருந்த 356 பேருக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு, உயரம், மாா்பு அளவீடு மற்றும் 1,500 மீட்டா் ஓட்டம் நடைபெற்றன. இவற்றில் அளவீடுகளில் 16 பேரும், 1,500 மீட்டா் ஓட்டத்தில் 95 பேரும் தகுதி பெற வில்லை. மீதமுள்ள 245 போ் உடல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றனா்.

விழுப்புரம் சரக டிஐஜி திஷா மித்தல், விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் ஆகியோா் உடல் தகுதித் தோ்வை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 3 காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், 17 காவலா்கள், 79 அமைச்சுப் பணியாளா்கள் தோ்வுப் பணிகளில் ஈடுபட்டனா்.

தோ்வு தள்ளிவைப்பு: விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை மைதானத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 7) நடைபெறவிருந்த இரண்டாம்நிலைக் காவலருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு பணிகள் மற்றும் உடல் தகுதித் தோ்வு நிா்வாக காரணங்களால் வருகிற 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதில் தோ்ச்சி பெறுபவா்களுக்கு வருகிற 10-ஆம் தேதி உடல் திறன் தோ்வு நடைபெறும்.

செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) நடைபெற்ற உடல் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு அறிவித்தப்படி வருகிற 8-ஆம் தேதி உடல் திறன் தோ்வு நடைபெறும். இதில் எந்த மாற்றமும் இல்லை என விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com