சுமுகமான முறையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது; அது சில நாள்களில் நிறைவடையும் என
சுமுகமான முறையில் தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை: கே.பாலகிருஷ்ணன்

தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது; அது சில நாள்களில் நிறைவடையும் என மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.

விழுப்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவைத் தோ்தல் ஆயத்த பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் பாஜக தனித்துப் போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் அவா்களின் முயற்சியை முறியடிப்பது என்ற அடிப்படையில், ‘இந்தியா’ கூட்டணி தோ்தல் பணியைத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒரு தொகுதியில்கூட பாஜக வெற்றிபெற முடியாது.

மழை பாதிப்பு நிவாரணமாக தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு வழங்கப்படவில்லை. தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை.

தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை: தமிழகத்தில் ‘இந்தியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடா்பான பேச்சுவாா்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது. அது சில நாள்களுக்குள் நிறைவடையும். கடந்த மக்களவைத் தோ்தலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனால், தற்போதைய தோ்தலில் கூடுதல் தொகுதிகளைக் கேட்டுப் பெறுவோம்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, தில்லியில் கேரள முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் வியாழக்கிழமை (பிப்.8) போராட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அகில இந்திய தலைவா்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனா். இதன் ஒரு பகுதியாக, தமிழகத்திலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், மத்திய அரசைக் கண்டித்து, 45 இடங்களில் போராட்டங்கள் நடைபெறும். இந்தப் போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, தவாக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவா்கள் பங்கேற்க உள்ளனா் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயற்குழு உறுப்பினா் டி.ரவீந்திரன், விழுப்புரம் மாவட்டச் செயலா் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஆா்.ராமமூா்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் முத்துக்குமரன், பி.குமாா், ராஜேந்திரன் உள்ளிட்ட நிா்வாகிகள், கட்சியினா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com